வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு இன்று (01) முதல் PCR பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தொடக்கம் சுற்றுலா பயணிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டுக்கு வர அனுமதிப்பது தொடர்பில் உடுகம்பலவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கொரோனா தடுப்புக்கான ஜனாதிபதி படையணி மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வௌிநாடுகளில் இருந்து இலங்கை வரும் அனைவரும் நிலைமைக்கேட்ப தனிமைப்படுத்தல் நிலையங்கள் அல்லது வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். சுற்றுலா பயணிகளுக்கும் PCR சோதனை நடத்தப்படும்.
இதேவேளை, வௌிநாடுகளில் சிக்கித் தவிக்கும் அனைத்து இலங்கையர்களையும் இலங்கைக்கு அழைத்து வருவதே அரசாங்கத்தின் நோக்கம். அத்திட்டம் நிறுத்தப்படாது. சுமார் 21 நாடுகளில் இருந்த சுமார் பத்தாயிரம் இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்னும் 20,000 பேர் வரை அழைத்து வரப்படவுள்ளனர். பிற நாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர முறையான பொறிமுறையொன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.