வவுனியா இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சிலருக்கு அநீதியான முறையில் பதவியுயர்வு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பதவியுயர்வுகளை ரத்து செய்யுமாறு கூறி ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தப்போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
நேற்று நன்பகல் வவுனியா போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் கொழும்பு அகில இலங்கை பஸ் ஊழியர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து இவ்வேலைநிறுத்தப்போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
அரசியல் செல்வாக்கு மற்றும் பல்வேறு அழுத்தங்களை பயன்படுத்தி சட்டதிட்டங்களுக்கு அப்பால் வவுனியா போக்குவரத்துசபை ஊழியர்கள் 10 பேருக்கு முகாமையாளராக பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. கனிஷ்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இப்பதவியுயர்வுகளை உடனடியாக ரத்து செய்யுமாறு கோரியோ இவ்வேலைநிறுத்தப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வேலைநிறுத்தம் காரணமாக நேற்று இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை. இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.