இலங்கை மின்சாரசபைக்கு ஏற்பட்டுள்ள 10,000 கோடி ரூபா இழப்பை ஈடு செய்வதற்கு ஒரு அலகுக்கான மின்சார கட்டணத்தை 10.00 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக கூறி அந்நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கைகளை மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கம் ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய, மின்சாரப்பாவனையாளர்கள் உரிமையை பாதுகாப்பதற்கு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டு தொடக்கம் 40 ரூபா அதிக விலைக்கு மின்சாரத்தை தனியார்துறையினரிடமிருந்து கொள்வனவு செய்தமையினாலே இவ்விழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அச்சங்கம், இலங்கை மின்சாரச்சட்டத்தை மீறி கேள்விமனுக்கோரல் நடைமுறையை பின்பற்றாமல் மின்சாரம் கொள்வனவுச்செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த கொள்வனவுக்கு பொதுப்பயன்பாடுகள்சபை அனுமதி வழங்காத நிலையிலேயே மின்சாரக்கொள்வனவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மின்சார சட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை மாற்றி- சட்டத்தை திருத்தியமைத்து மின் விற்பனை மற்றும் மின்சார மாபியாவை கொண்டு செல்வதற்கு அதிகாரத்தை தன் கையில் வைத்துக்கொள்ளும் வகையில் மாற்ற மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு அமைச்சர் ரவி கருணாநாயக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
சுமார் 20,000 கோடி வரவுசெலவு நடைபெறும் மின்சாரத்துறையின் முழு அதிகாரத்தையும் ரவி கருணாநாயக்கவிடம் கையளித்தால் மத்தியவங்கிக்கு நிகழ்ந்ததே இங்கும் நிகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.மின்சாரத்தை பயன்படுத்தும் 63 இலட்சம் நுகர்வோரின் உரிமையை பாதுகாக்க மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கம் நாடு தழுவிய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று எச்சரிக்கிறோம். மின்சாரம் நுகர்வு பாதுகாப்புக்காக நீதிமன்ற உதவியையும் நாட நாம் தயங்கோம்.
மின்சாரத்துறை அமைச்சில் நிதி மோசடியானது 8000 கோடியையும் தாண்டியுள்ளது. மின்சார துஷ்பிரயோகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் பொறியியலாளர்களுக்கும் சம்பளம் விசேடவிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வருடாந்த சம்பளத்துக்காக ஒதுக்கப்படும் 100 கோடி ரூபாவுக்கான பணத்தையும் அப்பாவி மின்பாவனையாளர்களே சுமக்க வேண்டியுள்ளது. இந்தகை கேடுகெட்ட செயற்பாடுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய துறைசார் அமைச்சர், மின்சாரத்துறை செயலாளர், மற்றும் பொறியிலாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எமது சங்கம் முன்னெடுக்கும் என்றும் மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது.