குண்டுத் தாக்குதல்களினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு வியாபாரங்கள்

காலி முகத்திடலில் அந்தி சாயும் நேரம் வழமையான பரபரப்பையோ, சிறு வியாபாரிகளையோ காணமுடியவில்லை. கடலை நோக்கிய வண்ணம் வரிசையாக காணப்படும் கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், அதனை கண்டுகொள்வதற்கும் யாரும் இல்லை. இருட்டில் வெளிச்சம் வீசும் பொம்மைகளுடன் விளையாடுவதற்கு சிறுவர்கள் இல்லை. ஏன் வானத்தில் ஒரு பட்டம் கூட பறக்கவில்லை.

 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று ஒரு மாத காலம் கழிந்த பின்னரும், பொது இடங்களில் ஒன்று கூடுவதற்கு மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். காலி முகத்திடலை அண்டிய பகுதிகளில் உள்ள ஆடம்பர ஹோட்டல்களில் இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து அந்தப் பகுதியில் நடமாடுவதை மக்கள் தவிர்க்கின்றனர். மேலும் காலிமுகத்திடல் வாகனத் தரிப்பிடங்கள் மூடப்பட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அங்கு கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள் மக்கள் மறுபடி அங்கு வரும் வரை தங்களது கடைகளை காலவரையறையின்றி மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

காலி முகத்திடலை அண்டிய நட்சத்திர / ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் வர்த்தக கட்டிடங்களைப் போன்றே அதனை அண்மித்த பிற பகுதிகளிலும் வர்த்தக நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 42 வருட காலமாக நலீம் புறக்கோட்டையில் பழ வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்றார்.  இத்தனை வருட அனுபவத்தில் இக் காலப்பகுதியில் இவ்வாறு வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதைப் போன்று அவர் என்றுமே கண்டதில்லை.

“அல்லாஹ் எங்கள் மீதுள்ள கோபத்தை இவ்வாறு காட்டுகின்றார்” எனக்  குறிப்பிட்டவர் மேலும் தொடர்ந்தார். “சில காலமாக இலங்கையின் முஸ்லிம் சமூகம் பல குழுக்களாக பிரிந்திருக்கின்றது. பல விடயங்களில் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. நாங்கள் எங்களுடைய வேலையை மாத்திரம் பார்த்துக்கொண்ட போதும் மற்றைய சமூகத்தினருக்கு பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால் தாக்குதல்களின் பின்னர் அனைவருடைய கவனமும் எங்களின் பக்கம் திரும்பியுள்ளது. மக்கள் எங்களை ‘நானா’ மற்றும் ‘ஹாஜியார்’ என கூப்பிடுவார்கள். எங்களை அனைவரும் மதித்தார்கள். ஆனால் ஒரு சிலரின் நடவடிக்கையால் நாங்கள் கௌரவத்தை இழந்துவிட்டோம்.”

ஜெயகணேசன் வீதியோரம் தற்காலிகமாக அமைக்கப்பட்ட  கடையில் சிறுவர் புத்தகங்களை விற்பதன் மூலம் வருமானத்தை ஈட்டிக் வருகின்றார். பலரையும் போல சொந்த ஊரை விட்டு கொழும்பிற்கு வந்து, மஸ்கெலியாவிலுள்ள தனது குடும்பத்தினருக்காக பணம் சம்பாதிக்கின்றார். தாக்குதல்களின் பின்னர், அவருடைய வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அவருடைய உணவுத் தேவையை பூர்த்தி செய்வதே மிகவும் சிரமமாக உள்ளது.

“தற்போதுள்ள நிலைமையில், கொழும்பிலுள்ள மக்கள் முன்னர் போன்று பொருட்களை கொள்வனவு செய்வதில்லை. சில நாட்களில் ஒரு புத்தகம் கூட விற்பனையாவதில்லை.” என்றார்.

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர், புறக்கோட்டை பகுதியில் நிரந்தரமாக அமைக்கப்பட்ட கடைகள் பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளன. இதனால் தனது வருமானத்திற்காக கமல் நாளாந்தம் தற்காலிகமாக கடை அமைக்க வேண்டியேற்பட்டுள்ளது.

“அதிகாரிகளிடம் இது குறித்து பேசிய போது உள்ளே என்ன உள்ளது என்பது தெளிவாகத் தெரியுமாறு தற்காலிக கடைகளை அமைக்க அவர்கள் அனுமதித்தார்கள். ஆனால் நாள் முடிவில் அனைத்தையும் கட்டி எடுத்துச் செல்ல வேண்டும். எதனையும் விட்டுச் செல்ல முடியாது.” என தெரிவித்தார்.

 

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக மத வழிபாட்டுடன் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் பல உள்ளன.  இங்கு இயேசுவின் உருவச் சிலைகளை விற்பதற்கு இருக்கும் கடைகளுக்கு வெளியே கோவில் பூஜைகளுக்கான பூமாலைகளை கட்டி விற்பவர்கள்  உள்ளனர்.

அனைத்து மதம் சார்ந்த மக்களும் வந்து செல்லும் இடமாகவே தேவாலயம் இதுவரை காலமும் இருந்து வந்தது. கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதல் அதனை அண்டியுள்ள அனைத்து பகுதிகளையும் பாதித்துள்ளது. இதன் காரணமாக கிறிஸ்தவர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்கள் தங்களுடைய வணக்கஸ்தலங்களில் இருந்து விலகிச் சென்றுள்ளனர். இதனால் தேவாலயத்திற்கு முன்னால் உள்ள கடைகளின் வர்த்தக நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

கொச்சிக்கடையில் உள்ள கோவிலுக்கு பூமாலைகளை விற்றுவருபவர் தீபன் ராமகிருஸ்ணன். இந்த மாலைகளை தேவாலயத்திற்காகவும் மக்கள் வாங்குவது உண்டு.

“தாக்குதல்கள் இடம்பெற்றதில் இருந்து தேவாலயத்திற்குள் மக்கள் யாரும் செல்வதில்லை. இன்னமும் அனைவருக்குள்ளும் பயம் இருந்தே வருகிறது. இந்த வீதியில் என்னைப் போல் பலரும் பூமாலை கட்டும் வியாபாரத்தில் ஈடுபடுவதுண்டு. முன்னர் பலரும் இங்குவருவதால் வியாபாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தற்போது, அனைத்து கடைகளும் வெறிச்சோடிப் போயுள்ளன. கடந்த வாரம் சிறிது வழமை நிலை திரும்பியது. ஆனால் மீண்டும் பிற இடங்களில் இடம்பெற்ற கலவரத்தை அடுத்து மக்கள் வருவதை நிறுத்தி விட்டார்கள்.” என்றார் தீபன்.

 

மகேஸ்வரனின் நகைக்கடை அந்த வீதியில் தேவாலயத்தில் இருந்து சற்று தள்ளி உள்ளது. வாகனம் ஒன்றின் மீது இராணுவத்தினர் முன்னெடுத்த கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேரெதிரில் இருக்கிறது அவருடைய நகைக்கடை. இந்த வெடிப்பின் போது மகேஸ்வரனின் கடையில் உள்ள கண்ணாடிக் கதவுகள்/ யன்னல்கள் நொறுங்கியதுடன், கடையின் உள்புறமும் பாதிக்கப்பட்டது.

“இது நடந்த போது நான் எனது கடையை மீண்டும் புனரமைப்பதற்கு காப்பீட்டுக்கு விண்ணப்பித்தேன். ஆனால் இதுவரையில் அவர்களிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. நொறுங்கிப் போன கண்ணாடிகளுடன் நான் வாரக்கணக்கில் காத்திருக்க முடியாது. எனவே திருத்த வேலைகளுக்கு நானே பணம் செலுத்தி விட்டேன். வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காப்பீட்டுத் தொகையாக  அந்தப் பணத்தை என்னால் மீளப்பெற்றுக்கொள்ள முடியுமா எனத் தெரியவில்லை.”

 

அந்தப் பகுதியில் உள்ள பிற கடைகளை விட, தாக்குதல் நடந்த சில நாட்களிலேயே அதாவது மே மாதம் 3 ஆம் திகதி திருமதி. மனிக் தனது கடையை மீண்டும் திறந்திருந்தார். ஆனாலும் அவருடைய நிலைமையும் மற்றையவர்களைப் போலவே உள்ளது. ஆடையகம் மீண்டும் திறக்கப்பட்டதில் இருந்து குறிப்பிடும் வகையில் எந்த விற்பனையும் இடம்பெறவில்லை. இந்த நிலைமை தொடருமானால் எதிர்வரும் மூன்று மாதங்களில் கடையை மூட வேண்டி ஏற்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

“விற்பனை அதிகரிக்காவிட்டால், நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என எனக்குத் தெரியவில்லை. இது மாத்திரமே எங்களுக்குத் தெரியும், இந்த ஆடையகம் மாத்திரமே எங்களிடம் உள்ளது” என அவர் தெரிவிக்கின்றார்.

இந்தப்பிரதேசம் மாத்திரமின்றி, ஐந்துலாம்புச் சந்தி, பாபர் வீதி போன்ற இடங்களில் நடைபாதையில் கடை வைத்திருந்த  பலரும் வியாபார நடவடிக்கையினை மேற்கொள்ளமுடியாது பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவருகிறது. தொடரும் இந்த அவல நிலை இலங்கையின் சுற்றுலா துறை துவங்கி, ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்களையும் மேலும் சிறு வியாபாரிகள் வரையும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 

வழிமூலம்:  roar தமிழ்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435