மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் ஆசிரியர் பயிற்சிக்கு உள்வாங்குவதற்கான நேர்முகத்தேர்வுக்கான கடிதங்களை பெற்றுக்கொண்டவர்கள் உரிய ஆவணங்களுடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ம் திகதி நேர்முகத்தேர்விற்கு சமூகமளிக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேர்முகத்தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. எனினும் உரிய ஆவணங்களுடன் நேர்முகத்தேர்விற்கு சமூகமளிக்காதவர்கள் பயிற்சிக்கு உள்வாங்கப்படமாட்டார்கள்.
பயிற்சிக்கான கடிதம் கிடைத்த உதவி ஆசிரியர்கள், பணியாற்றும் பாடசாலையின் அதிபர், வலய மற்றும் மாகாண கல்விப்பணிப்பாளர்களின் விடுவிப்புக் கடிதங்களும் கோரப்பட்டுள்ள ஏனைய ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கத்தவறுபவர்கள் பயிற்சிக்கு உள்வாங்கப்படமாட்டார்கள். அவ்வாறு சந்தர்ப்பத்தை பயன்படுத்தாதவர்கள் சிபாரிசுக்காக அமைச்சுக்கு வருவதில் எவ்வித பயனும் இல்லை.
மேலும் கடிதம் அனுப்பப்படாதவர்களுக்கு கல்வியமைச்சு தொலைக்கல்வி பயிற்சி நெறியை வழங்க தீர்மானித்துள்ளது. அந்தந்த பிரதேசங்களிலேயே பயிற்சிகள் வழங்கப்படும். ஆசிரியர் பற்றாக்குறை, மற்றும் பயிற்சி பெறுபவர் நலன் கருதி இத்தொலைக்கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. தொலைக்கல்விக்கான விண்ணப்பங்கள் கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் நாளை (31) வெளியிடப்படும்.
இது தொடர்பான விபரங்களை சக ஆசிரியர்களுக்கும் தெரிவித்து அவர்களும் விண்ணப்பிப்பதற்கு உதவுங்கள் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.