உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலையடுத்து பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தமது வருமானத்திற்கு பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாக தனியார் வேன் ஓட்டுநர்கள் கவலை வௌியிட்டுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைள் காரணமாக விமான நிலையத்தில் இருந்து வௌியேறும் நுழைவாயிலுக்கு அருகில் தமது வாகனங்களை நிறுத்துவதற்கு இடமளிக்காமையினால் வாடிக்கையாளர்களை அணுகுவது சிரமாக உள்ளது என்று தனியார் வாகன ஓட்டுநர் சங்கத்தின் தலைவர் L.D.S சமன்குமார தேசிய பத்திரிகையான சன்டேடைம்ஸ்க்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.
விமானநிலையத்தின் வருகை நுழைவாயிலுக்கு வௌியில் நிறுத்தப்படும் வாகனங்களை விமானநிலைய வாகனங்களை விமானப்படையினர் முழுமையாக சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர். தற்போதைக்கு விமானநிலைய வாகனங்களையே வருகை நுழைவாயிலுக்கு 30 மீற்றர் தொலைவில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயணிகள் வரும்வரையில் நிறுத்தி வைப்பதற்கு அனுமதிப்பதில்லை. உடனடியாக பயணியை ஏற்ற முடியாது போனால் நாம் இரண்டாவது முறையும் சுற்றி வரவேண்டும். அப்போது எமக்கு முன்பாக சுமார் 50 வாகனங்கள் காத்திருக்கும் என்று கவலை வௌியிட்டுள்ளார்.
பயணிகளை வௌியே செல்ல அனுமதிப்பதில்லை. பதிலாக தனியார் அல்லது விமானநிலைய வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி அல்லது ஷட்டில் பஸ்ஸினூடாக சுமார் 350 மீற்றர் தொலைவில் உள்ள நாயககந்த பிரதேசத்தில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு செல்லுமாறு வலியுறுத்தப்படுகின்றனர் என்கிறார் மற்றொரு வாகன சாரதியான ஏ.ஜி. அனில் முனசிங்க
பயணிகளை ஏற்றவரும் குடும்பத்தினர் அல்லது நன்பர்கள் பிரிதொரு நிறுத்தத்தில் தமது வாகனங்களை நிறுத்தி வைத்திருந்து பின்னர் உரிய நபர் வந்த பின்னர் நாயககந்த வாகன நிறுத்ததிற்கு சென்று ஏற்றிச் செல்லவேண்டும். குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரங்கள், தொலைக்காட்சிப் பெட்டி போன்றவற்றை கொள்வனவு செய்யும் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது. அத்தகைய பொருட்களை ஷட்டில் பஸ்ஸில் ஏற்ற முடியாது என்றும் முனசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள சிரேஷ்ட விமானப்படை அதிகாரியொருவர், தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் சற்று மாற்றப்பட்டுள்ளதாகவும் பயணிகள் வரும்வரையில் காத்திருக்க, குறிப்பிட்ட எண்ணிக்கையான பதிவு செய்யப்பட்ட தனியார் வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தேசிய பாதுகாப்பு குறித்து தாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் நிலைமை வழமைக்கு திரும்பும் வரை ஏற்படும் பிரச்சினைகளை பொருத்துக்கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.