கூட்டு ஒப்பந்த புதிய சம்பளம் அடிப்படையில் திறன் கொடுப்பனவு 140 ரூபாவை தமது சம்பள பற்றுச்சீட்டில் உள்ளடக்க மறுத்தமையை எதிர்த்து அக்கரப்பத்தனை கிளாஸ்கோ ஆகுரோவா தோட்ட தொழிலாளர்கள் அர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் 100ற்கும் மேற்பட்டோர் இன்று காலை (11) காலை 8 மணியளவில் டயகம தலவாக்கலை பிரதான வீதியின் ஆகுரோவா சந்தியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட பொழுது திறன் கொடுப்பனவு என 140 ரூபா உள்ளடங்கப்பட்டிருந்தது. நாளொன்றுக்கு 18 கிலோவுக்கு அதிகமாக தேயிலை கொழுந்து பறிக்கப்படும் பொழுது இந்த திறன் கொடுப்பனவான 140 ரூபா வழங்கப்பட வேண்டும் என கையொப்பம் இடப்பட்டது.
ஆனால் ஆகுரோவா தோட்ட நிர்வாகம் இந்த திறன் கொடுப்பனவான 140 ரூபாவை வழங்க மறுத்துள்ளது. ஆரம்பத்தில் நோம் அடிப்படையில் பறிக்கப்பட்டு வந்த கொழுந்துகளுக்கு முறையான சம்பள தொகை கிடைக்கபெற்றது.
இருந்தும் அதே நோம் அடிப்படையில் தற்போது தேயிலை கொழுந்து பறிக்கப்படும் பொழுது கொடுக்க வேண்டிய 140 ரூபாவை வழங்குவதற்கு நிர்வாகம் தயக்கம் காட்டுவது ஏன் ? என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை வழமையாக வழங்கப்படும் நாளாந்த சம்பளம் நேற்று மாலை(10) வழங்கப்பட்டது. இருந்தும் திறன் கொடுப்பனவான 140 ரூபாய் உள்ளடங்கப்படவில்லை.
மேலும் 140 ரூபாவை நிர்வாகம் பெற்றுத்தரும் வரை தமது சம்பள பணத்தை பெறப்போவதில்லை என தெரிவித்து சம்பளத்தை நிர்வாகத்திடம் திருப்பி ஒப்படைத்திருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
அத்தோடு 18 கிலோ எடுத்த ஓர் இருவர் மாத்திரமே இருப்பதாகவும் அதிகமானவர்களுக்கு அரை நாள் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் வறட்சியான காலநிலையில் 18 கிலோ தேயிலைக்கொழுந்து எடுப்பது கடினமானது என்றும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இன்னும் இரண்டு மூன்று தினங்களில் தைப்பொங்கல் திருநாள் கொண்டாட ஆயத்தமாகி வருகின்ற நிலையில் இவ்வாறு குறைந்த சம்பளத்தை ஒருபோதும் தங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை இன்று காலை(11) கவனயீர்ப்பு போராட்டம் நடத்திய பின்னர் இவ்விடயம் தொடர்பில் தொழில் திணைக்களத்திற்கு அறிவித்து தீர்வு கிடைக்கும் வரை பொறுத்திருக்குமாறு தோட்ட அதிகாரிகளால் தெரிவித்ததையடுத்து காலை 9 மணியளவில் மீண்டும் வழமையான தொழிலுக்கு தொழிலாளர்கள சென்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி- வீரகேசரி