இலங்கையில் இயங்கும் வௌிநாட்டு வங்கிகள் உள்நாட்டு ஊழியர்களை சேவையில் இருந்து நீக்கி வருவதாக இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்கவின் கையெழுத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலாபம் பெறும் பொருட்டு ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கையில் வௌிநாட்டு வங்கிகள் ஈடுபடுவதை இலங்கை வங்கி ஊழியர் சங்கம் என்றவகையில் நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆட்குறைப்பு நடவடிக்கையில் குறித்த வங்கி ஈடுபட்டுள்ளது. அதில் கட்டாய ஓய்வு முறை (Compulsory Retirement Scheme – CRS) சுயவிருப்பு ஓய்வு முறை (Voluntory Retirement Scheme – VRS) போன்ற ஓய்வு முறைகளினூடாக நட்டஈடு வழங்கி ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் குறித்த வங்கி, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கான கடமை நிறைவடைந்துள்ளமையினால் ஓய்வு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
பொறுப்புகள் வேறு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு அல்லது வேறு தரப்பினரிடம் வழங்கப்பட்ட பின்னர் இவ்வாறு ஓய்வெடுக்குமாறு ஊழியர்களை கட்டாயப்படுத்துவது கட்டாயப்பணி நீக்கம் (Contractive Termination) ஆகும். இச்செயற்பாட்டுக்கு இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் என்றரீதியில் நாம் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். மேலும் நிரந்தர நியமனத்தில் இணைத்துக்கொண்ட ஊழியர்களை உரிய காலத்திற்கு முன்ர் பலவந்தமாக பணியை விட்டு நீக்குவதற்கு மிக நூதனமான முறையில் செயற்படுகின்றமையானது தொழிலின்மையை இல்லாதொழிக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு முற்றும் எதிரான செயலாகும்.
இலங்கையில் தேர்தல் நடைபெறும் இந்த முக்கியமான காலப்பகுதியில், தேசிய உழைக்கும் வர்க்கத்தினரை பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, நிதியமைச்சர், தொழில் அமைச்சர் மற்றும் வௌிநாட்டு வங்கியின் நிறைவேற்று அதிகாரிகளிடம் எமது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்படி விடயம் தொடர்பில் குறித்த வங்கியின் நிறைவேற்றுச்சபையிடமும் தொழில் ஆணையாளர் நாயகத்திடமும் எமது சங்கம் எழுத்து மூல முறைப்பாட்டை வழங்கியுள்ளது. அத்துடன் வௌிநாட்டு வங்கிகள் மேற்கொள்ளும் இத்தகைய மோசமான செயற்பாட்டை உடனே நிறுத்தி வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த எமது சங்கம் கடமையான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.