தென் மாகாண பட்டதாரிகளை நியமனத்திற்காக தெரிவு செய்யும் போது வௌிவாரி, உள்வாரி பட்டதாரிகள் என்று வகைப்படுத்தாது செயற்படுவோம் என்று தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நேற்று (04) தென் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பட்டப்படிப்பை அடிப்படைத் தகமையாக கொண்ட எந்தவொரு அரச தொழில்வாய்ப்பிற்கும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பட்டப்படிப்பும் தகமையாக கொண்டு செயற்படுவதே தென் மாகாணத்தின் நோக்கமாகும். மத்திய அரசும் இந்த கொள்கையை கொண்டே செயற்படவேண்டும். எனினும் மத்திய அரசாங்கம் வௌிவாரி பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்பினை இல்லாதொழித்து வருகிறது.
கடந்த ஜூன் 16ம் திகதி தென் மாகாணத்தில் உள்ள 16 தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு 94 பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் நேரடியாக இணைத்துக்கொள்ளப்பட்டனர். அதற்கமைய உள்வாரி பட்டதாரிகள் 56 பேரும் வௌிவாரி பட்டதாரிகள் 31 பேரும் வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த 7 பேரும் இதில் உள்ளடங்குவர்.
கடந்த வாரம் ஆசிரியர் உதவியாளர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்களில் 6 பேர் வௌிவாரி பட்டதாரிகளாவர்.
இம்மாதம் நடுப்பகுதியில் 1300 நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அதிக எண்ணிக்கையானவர்கள் ஆசிரியர்களாவும் மிகுதி அபிவிருத்தி அதிகாரிகளாகவும் நியமனம் பெறவுள்ளனர். இந்நியமனம் வழங்குவதிலும் மேற்கூறப்பட்ட கொள்கை பின்பற்றப்படுகிறது. பட்டப்படிப்பை அடிப்படைத் தகமையாக கொண்ட வேலைவாய்ப்பிற்கு ஆட்சேர்ப்புச் செய்யும் போது உள்வாரி, வௌிவாரி என்று வகைப்படுத்துவது குற்றமாகும். அதனை திருத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டப்படிப்பின் தரத்தை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவும் பல்கலைக்கழகமுமே தீர்மானிக்கின்றன. அரசியல்வாதிகள் அல்ல. மத்திய அரசின் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இதனை புரிந்துகொள்ளவேண்டும் என்றும் தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.