ஊழியர் நம்பிக்கை நிதிய நன்மைகள் பற்றி தெரியுமா?

ஊழியர் நம்பிக்கை நிதியம் ETF என்ற பெயர் பெரும்பாலான இலங்கையருக்கு மிகவும் பரீட்சையமானது. ஆனால் அதில் உள்ள நன்மைகள், அதன் பயன்பாடு தொடர்பில் பெரும்பாலானவர்கள் அறிந்து வைத்திருப்பார்களா என்பது கேள்விக்குரியது. அனைவரும் குறித்த விடயம் தொடர்பில் தெளிவான அறிவை பெற்றிருத்தல் வேண்டும் என்ற நோக்கில் இவ்வாக்கம் தரப்படுகிறது.

ஊழியர் நம்பிக்கை நிதியம் என்றால் என்ன?

ஓய்வூதிய நிதியத்திற்கு உரிமைகோரும் அரசாங்க மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களில் சேவையாற்றும் ஊழியர்களைத் தவிர ஏனைய சகல ஊழியர்களும் பணியில் இருக்கும் போது வழங்கப்படும் நிதியானது ஊழியர் நம்பிக்கை நிதியம் எனப்படுகிறது.

1981ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாந் திகதி இந்நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. இது ஊழியர் சேமலாப நிதியம் (EPF) போன்று நேரடியாக தொழில் திணைக்களத்துடன் தொடர்புபடாத நிதியமாகும். ஊழியர் நம்பிக்கை நிதியம் என்ற பெயரில் இயங்கும் இந்நிதியமானது அரசாங்கம், ஊழியர் மற்றும் தொழில்தருநர் ஆகிய மூன்று தரப்பினராலும் உருவாக்கப்பட்ட நியதிச் சட்டரீதியான ஒரு சபையின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

தொழில்தருநர் மட்டுமே பங்களிப்பு செய்யும் இந்நிதியத்தில் ஊழியர் ஒருவரின் மாதாந்த சம்பளத்தின் 3 வீதம் தொழில்தருநரினால் குறித்த நிதியத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

ஊழியர் நம்பிக்கை நிதியம் எவ்வகை ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது?

சகல விதமான வர்த்தக வலயங்கள், கைத்தொழில் நகரங்கள், கைத்தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய தனியார் துறையில் நிரந்தரமாக, ஒப்பந்த அடிப்படையில், தற்காலிக பணியாளர்கள், துண்டுச்சம்பள முறைமை, பயிலுநர்கள் மற்றும் தகுதிகாண் நிலையில் உள்ளவர்கள் என எந்நிலையில் பணியாற்றும் ஊழியர்களும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு உரித்துடையவர் ஆவர்.

ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு உரித்துடையவரல்லாதோர் யார்?

ஊழியர் நம்பிக்கை நிதியமானது பணிப்பெண்கள், பத்திற்கும் குறைந்த எண்ணிக்கையான ஊழியர் உள்ள நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சமய மற்றும் புண்ணிய ஸ்தலங்களில் பணியாற்றுபவர்கள், வயது குறைந்த குற்றவாளிகள், பெற்றோர் பாதுகாவலர் அல்லாதோர், விசேட தேவையுடையவர்களை பயிற்றுவிக்கும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள், அல்லது அவற்றை முதன்மைப்படுத்தும் தொழிலில் ஈடுபடுபவர்கள், குடும்ப அங்கத்தவர்களை கொண்டு நிர்வகிக்கும் நிறுவனங்களில் உள்ளோர் இந்நிதியத்தை பெறுவதற்கான வாய்ப்பை இழக்கின்றனர்.

ஊழியர் நம்பிக்கை நிதியத்தை தவணை தினத்தில் செலுத்தாத போது

ஊழியர் நம்பிக்கை நிதியமானது வழங்கப்படும் தவணை தினத்தில் முறையாக செலுத்த வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். தொழில்தருநர் அபராதத்தொகையையும் சேர்த்து செலுத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார். ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டத்திற்கமைய தனிநபர் சபையினால் மேற்கொள்ளும் தவறுக்கு கூட்டிணைக்கப்பட்ட நிறுவனமாயின் அதன் பணிப்பாளர்கள் யாவரும் அத்தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

நிதியத்தை எவ்வாறு மீளப் பெறுவது?

60 வயது பூர்த்தியாகும் போது குறித்த நிதியம் பெற்றுக்கொள்ள முடியும்
நாட்டிற்கு திரும்பி வரும் நோக்கமின்றி வெளிநாடு செல்வதாயின் அப்பணத்தை பெற முடியும்
எதிர்பாராத வகையில் நிரந்த அங்கவீனத்திற்குள்ளாக வேண்டியிருப்பின் பெற்றுக்கொள்ளலாம்.
ஓய்வூதியம் பெறக்கூடிய அரச சேவையில் இணையும் வாய்ப்பு கிடைத்தால் பணத்தை பெற முடியும்.
தொழில் இருந்த ஓய்வு பெற்றால் அல்லது விலகினால் நிலுவையை மீளப்பெறலாம். ஆனால் ஒரு நிறுவனத்திலிருந்து விலகி நிதியை பெற்று வேறொரு நிறுவனத்தில் இணைந்தால் 5 வருத்தின் பின்னரே மீண்டும் பெற முடியும்.

நிதியத்திற்கு சொந்தக்காரர் எதிர்பாராத வகையில் இறப்பாராயின் குறித்த நிதியானது ஏற்கனவே அவரின் பெயரின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளவருக்கு சொந்தமாகும்.

நிதியத்தினூடாக கிடைக்கும் நன்மைகள்

ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் அங்கத்தவராகியுள்ள ஒவ்வொருவரும் உயிர் காப்புறுதி பெறுவதற்கு உரித்துடையவராகிறார்.

அந்நன்மையை பெறுவதற்கு அங்கத்தவர் இறக்கும் போது ஊழியர் 70 வயதுக்கு குறைந்தவராக இருக்க வேண்டும்.
மரணம் நிகழும் போது ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் அங்கத்தவராக இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 6 மாதம் சந்தாப்பணம் செலுத்தியிருக்க வேண்டும்.

இறந்து 2 வருடங்களுக்குள் நிதியத்திலிருந்த மரண உதவி கோரியிருத்தல் வேண்டும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435