ஊவா மாகாணத்தில் கடந்த 10 வருடங்களாக ஆறுமாத ஒப்பந்த அடிப்படையில் 19 தடவைகள் தற்காலிக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் சில ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய வரப்பிரசாதங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
நேற்று (23) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய ஆசிரியர் சபையின் பிரதான செயலாளர் சுதந்த ரத்னாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் திகதி ஊவா மாகாணசபை 292 ஆசிரியர்களுக்கு 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தற்காலி நியமனம் வழங்கியுள்ளது. இன்று வரை அந்நியமனங்கள் ஆறு மாதகால ஒப்பந்த அடிப்படையிலேயே உள்ளது. அதற்கு அப்பால் சென்று நிரந்தரமாக்குவதற்கு ஊவா மாகாணசபை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரையில் அவ்வாசிரியர்களுக்கு ஆறுமாத கால ஒப்பந்த அடிப்படையில் 19 தடவைகள் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
2007ம் ஆண்டு பொது சாதாரண பொது விதிமுறைக்கமைய இந்த 292 நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்தது. இந்நியமனங்களுக்கு எதிராக நுண்கலை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் வழக்கும் தொடுத்திருந்தனர். அதற்கமைய நீதிமன்றத்திற்கு எவ்வித தகவலும் அறிவிக்கப்படாமல் 6 மாத கால தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தலையீட்டை தவிர்க்கவே இவ்வாறு செய்யப்படுகிறது. ஆனால் நியமனக்கடிதம் தற்காலிக நியமனத்திற்கான கடிதம் அல்ல. நிரந்தர நியனமத்திற்காக வழங்கப்படும் நியமனக்கடிததே இவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஆறு மாத தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் என்பது உள்ளடக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணசபை தேர்தல் காலத்தில் இந்நியமனங்கள் வழங்கப்பட்டன என்று அவர் மேலும் தெரிவித்தார்.