இலங்கை இந்திய அரசுகளுக்கிடையில் கைச்சாத்திடப்படவுள்ள எட்கா ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களினூடாக ‘கறுப்பு புதன்’ எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இலங்கை தொழில்நுட்பத்துறைசார் ஊழியர்களின் தொழிற்சங்கமான UNITE நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய நாளைதினம் (19) கறுப்பு புதனாக அறிவிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களான முகப்புத்தம், ட்விட்டர் என்பவற்றின் ‘புரோபைல் பிக்சராக கறுப்பு வர்ணத்தில் பதிவேற்றம் செய்து எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறை இளந்தலைமுறையினரின் எதிர்காலத்தை பறிக்கும் எட்கா ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கட்சி பேதமின்றி அனைத்து இலங்கையரும் சமூக வலைத்தளத்தினூடாக ஒன்றிணையுமாறு UNITE தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மொரட்டுவ, கொழும்பு, வடமேல் உட்பட நாட்டிலுள்ள பல பல்கலைக்கழகங்களின் மாணவ மாணவிகள் இவ்வெதிர்ப்பு நடவடிக்கைக்கு பங்களிப்பு வழங்கவுள்ளனர்.
சர்வதேச தகவல் தொழில்நுட்ப தரத்தை தரப்படுத்தல் செய்யும் Networked Readiness Index இற்கு அமைவாக தற்போது இந்தியா ஒப்பீட்டளவில் இலங்கையை விடவும் தகவல் தொழில்நுட்பத் தரம் மற்றும் போட்டிச்சூழலில் பின்னோக்கிச் செல்வதாக கணிப்பிடப்பட்டுள்ளது. உலக தரத்திற்கமைவாக ஆசிய நாடான இலங்கை போட்டித்தன்மை மிக்க பத்து நாடுகளில் ஒன்றாக உள்வாங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நவீனமயப்படுத்தல், தரம் மற்றும் போட்டித்தன்மையை அரசியல் பலத்தை பயன்படுத்தி முழுமையாக இந்தியா தனது நாட்டுக்கு சாதகமாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இவ்வொப்பந்தத்தினூடாக ஏற்படுகிறது. இலங்கையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான தகவல் தொழில்நுட்ப மனித வளமானது நாட்டை விட்டுச் செல்லும் துரதிஷ்ட சூழலை எட்கா ஒப்பந்தம் வழிவகுக்கும் என்று UNITE சுட்டிக்காட்டுகிறது.
எட்கா தொடர்பான தனது தீர்மானத்தை அரசு மாற்றிக்கொள்ளாத பட்சத்தில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள பின்நிற்கப்போவதில்லை என்று UNITE தொழிற்சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்
வேலைத்தளம்