எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கு நியாயமான தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்காலத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தனியார் பஸ் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
எரிபொருள் சூத்திரத்திற்கு அமைய பஸ் கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான சூத்திரம் ஒன்றைத் தயாரிக்க அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளத் தயார் என்று அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்காக தமக்கு சாதகமான தீர்வொன்று கிடைக்கவிட்டால், எதிர்காலத்தில் நாடாலாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தயார் என அகில இலங்கை தனியார் பஸ் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமது சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவர்களுடன் நாளைய தினம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதன் செயலாளர் அஞ்சன ப்ரியஞ்சித் தெரிவித்துள்ளார்.