வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சமுர்த்தி வெற்றிடங்களுக்கு நியமனம் வழங்க முடியாத நிலை காணப்படுவதாக சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய தரத்தை மேம்படுத்துவதற்கு சுமார் ஐந்தாயிரம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தேவைப்பட்ட போதிலும் நிதியமைச்சின் இழுத்தடிப்பினால் நியமனங்களை வழங்க முடியாதுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நியமனம் தொடர்பில் மூன்று அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பதவிகளுக்கு தகைமையுடைய இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும் நியமனம் வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை நிதியமைச்சு அனுமதிக்காத காரணத்தினால் தாமதங்கள் நிலவுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நியமனம் வழங்கப்பட்ட பின்னரான சம்பளத்திற்கு நிதியமைச்சு சம்பள நிதியை ஒதுக்க வேண்டும். இதனை கருத்திற்கொண்டு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.