கொவிட் 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபா வழங்கும் திட்டத்திற்கு பங்களிப்பு வழங்க முடியாது என கிராம சேவகர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இத்திட்டமானது அரசியல் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எனக்கூறி குறித்த திட்டத்தினூடாக நிதி பகிர்ந்தளிப்பு நடவடிக்கையில் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
அகில இலங்கை சுதந்திர கிராமசேவையாளர் சங்கம், ஐக்கிய கிராம சேவகர் சங்கம் உட்பட பல சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேவையில் இருந்து விலகிக்கொண்டுள்ளன.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தகைய திட்டங்கள் அரசியல் லாபம் கருதியே முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டில் எந்தவொரு அவசர நிலை சந்தர்ப்பத்தில் கிராமசேவையாளர்கள் முன்னிலையில் இருந்து சேவை வழங்கினாலும் இம்முறை கிராமசேவையாளர்களை பொருட்படுத்தாது சமுர்தி அதிகாரிகளினூடாக ஐந்தாயிரம் ரூபா வழங்கப்படுகிறது. கிராம சேவையாளர்களினால் தயாரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள அவசியமானவர்களை கருத்திற்கொள்ளாமல் சமுர்தி அதிகாரிளினூடாக மீள பட்டியல் தயார்படுத்தப்பட்டு, அரசாங்கத்தின் பிரதேச அரசியல்வாதிகளின் தலையீட்டினூடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது என்றும் அச்சங்கங்கங்கள் ஊடகங்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளன.
மூலம் – அனித்தா