கடந்த ஒரு வருட காலமாக நிலுவைச் சம்பளம் வழங்கப்படவில்லை என்று தென் மாகாண ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்பட்ட மற்றும் பதவியுயர்வு வழங்கப்பட்ட சுமார் 30,000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கே கடந்த ஒரு வருட காலமாக நிலுவைச் சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
தென் மாகாணத்தில் சுமார் 66 தேசிய பாடசாலைகளும் 1113 மாகாண பாடசாலைகளும் உள்ளன. தேசிய பாடசாலைகளில் சுமார் 8000 ஆசிரியர்களும் மாகாண பாடசாலைகளில சுமார் 25,000 ஆசிரியர்களும் கற்பிக்கின்றனர் என தென் மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் கல்வியியற் கல்லூரியில் பயிற்சி பெற்ற அதிக எண்ணிக்கையான ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அதேபோல் மேலும் பலர் புதிதாக ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்னர். அவர்களுக்கும் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் நிலுவைச் சம்பளத்தை வழங்குவதற்காக150 மில்லியன் ரூபா பணம் தேவைப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தொகையினை இசுருபாய மற்றும் மாகாணசபை வழங்கிய பின்னர் நிலுவைச் சம்பளம் வழங்கப்படும் என்று தென் மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதான கணக்காளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.