வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்ற ஓமான் சென்று 16 வருடங்கள் ஊதியமின்றி சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண்ணை தாய் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரளவின் ஆலோசனைக்கமைய ஓமானுக்கான இலங்கைத தூதரகம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பாணந்துரை, மொரவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த நாலனீ பெர்ணாண்டோ என்ற பெண்ணே இவ்வாறு 16 வருடங்களின் பின்னர் நாடு திரும்பியுள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண்ணாக ஓமான் சென்ற குறித்த பெண் அன்று தொடக்கம் ஊதியம் இன்றி பணியாற்றியதுடன் உறவினருடன் எவ்வித தொடர்பையும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
கடந்த 2015ம் ஆண்டு குறித்த பெண்ணை தாய்நாட்டுக்கு அனுப்புவதற்காக அவருடைய காலவதியான வீசா மற்றும் கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்கு அவருடைய எஜமான ஓமான் தொழில் அமைச்சின் உதவியை நாடியுள்ளார். இது தொடர்பில் இலங்கை தூதரகத்திற்கு அவ்வமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் அமைச்சரின் ஆலோசனைக்கமைய குறித்த பெண் தூதரகத்தின் சுரக்சா பாதுகாப்பு இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அப்பெண் பணியாற்றி பிரதேசத்தில் உள்ள நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்த இலங்கை தூதரக அதிகாரிகள் அவருக்கான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கமைய 9130 ஒமான் ரியால்( சுமார் 36 இலட்சம் ரூபா ) ஊதியபபணத்தை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த பணம் வழங்கப்படாமையினால் இவ்வாண்டு (2017) மீண்டும் வழக்கு தொடரப்பட்டு குறித்த வீட்டுரிமையாளர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்
இதன்போது குறித்த தொகையை முழுமையாக ஒரே நேரத்தில் தன்னால் செலுத்த முடியாது என்று தெரிவித்த வீட்டுரிமையாளர் கட்டம் கட்டமாக வழங்க இணங்கினார். அதற்கமைய முதலில் மூன்று இலட்சம் ரூபாவும் மாதாந்தம் அறுபதாயிரம் வழங்க இணங்கியுள்ளார். இதனையடுத்து கடந்த இரு வருடங்களாக பாதுகாப்பு இல்லத்தில் இருந்த நாலனி கடந்த மே மாதம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பபை நாடி சென்றுள்ள இலங்கையரை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும் பிரச்சினைகள் ஏற்படின் உண்மையான தகவல்களை பணியகத்திற்கு வழங்குவதனூடாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பணிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.