ஓய்வு பெற்ற ரயில்வே திணைக்கள ஊழியர்களை இன்று (11) உடனடியாக ரயில்வே தலைமையகத்திற்கு சமூகமளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்கள் தமது போராட்டத்தை நிறுத்த முன்வராததையடுத்தே இவ்வறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ரயில்வே சேவை கட்டாய சேவையாக அறிவிக்கப்பட்டதையடுத்து தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், ஓட்டுநர்கள், மற்றும் காவலர்கள் உடனடியாக சேவைக்கு திரும்புமாறு ரயில்வே பொது முகாமையாளர் (செயற்பாடு) விஜய சமரசிங்க அறிவித்துள்ளார்.
இன்று (11) சேவைக்கு சமூகமளிக்காதவர்கள் சேவையிலிருந்த நீக்கப்பட்டவர்களாக கருதப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எம். அபேவிக்ரம, இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ரயில்வே மேற்பார்வை அதிகாரிகள் மீண்டும் சேவைக்கு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் இன்று விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து ரயில்வே தொழிற்சங்க அங்கத்தவர்களும் கலந்துகொள்ளவேண்டும் என்று ரயில்வே பாதுகாப்பு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ஜானக்க பெர்ணாண்டோ அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.