கட்டாரில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையால், அங்கு பணிபுரியும் இலங்கையர்களுடன் கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்றை கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே அறிவித்துள்ளார்.
கட்டாரிலுள்ள இலங்கைத் தூதுரகத்தில் எதிர்வரும் புதன்கிழமை (14) பிற்பகல் 5 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும், அதில் பங்கேற்குமாறும் கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சவூதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஏமன் முதலான ஐந்து வளைகுடா நாடுகளும் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்துள்ளதால், கட்டாரின் நிலைமை குறித்தும் அங்கு பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்தும் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், கட்டாரில் அவசர நிலை ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் லியனகே தெரிவித்துள்ளார்.
மேலும், கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு உணவு மற்றும் தொழில் தொடர்பில் பிரச்சினை எதுவும் இல்லை. இலங்கையர்களின் தொழிலுக்கு பாதுகாப்புள்ளது. தமது தொழில்வாய்ப்பு இல்லாது செய்யப்பட்டதாக எவரும் வந்து தம்மிடம் முறையிடவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சினதும் ஆலோசனைக்கு அமையவே தான் அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்டாரிலுள்ளவர்கள் குறித்து தகவலறிய 0097 455 564 936 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தன்னை தொடர்புகொள்ளுமாறும் இலங்கைக்கான கட்டார் தூதுவர் தெரிவித்துள்ளார்.