
தொழிலாளருக்கு சுதந்திரம் வழங்கும் வகையில் கஃபாலா சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தாலும் அதனால் தொழிலாளருக்கு பெரிய நன்மைகள் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்று சர்வதேச மன்னிப்புச்சபை குற்றம்சாட்டியுள்ளது.
தொழிலாளர்களுக்கான கட்டார் சட்டமானது நவீன யுகத்தின் அடிமைத்தனத்தை பேணுவதாக அமைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
மேலும், 2020 ஆம் ஆண்டு கட்டாரில் நடத்தப்படவுள்ள உலகக்கோப்பை காற்பந்து போட்டிக்கான தயார்படுத்தலுக்கு உலகம் முழுவதிலுமிருந்த இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் எனினும் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படாமையினால் பலர் உயிரிழந்துள்ளனர் என்றும் மன்னிப்புச்சபை கூறியுள்ளது.
கட்டாரில் பணியில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் தொழில் புதிய தொழில் வழங்குனரிடம் பணிக்கு சேர்தல் மற்றும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தனது எஜமானிடம் அனுமதி பெறுதல் அவசியம் என்று கூறும் கஃபாலா சட்டத்தை ரத்து செய்வதாக கட்டார் அறிவித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலகுத் தன்மையுடன் பாதுகாப்பை வழங்கக்கூடிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கஃபாலா சட்டத்திற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டம் கடந்த 13 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது.
எஜமானரின் தயவை எதிர்பார்த்திருக்கும் நிலைமை தற்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இல்லாத போதிலும் கூட தாய்நாட்டுக்கு செல்வதற்கு தொழில்வழங்குனர்களின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டிய துர்பாக்கிய நிலை காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை, இந்தியா உட்பல பல ஆசிய நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் கட்டார் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி- பிபிஸி
வேலைத்தளம்