14ஆம் திகதி முதல் கடமைக்கு திரும்புமாறு ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் அழைப்பு
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.
சம்பள முரண்பாட்டுக்கு ஒருமாத காலத்துக்குள் தீர்வை பெற்றுத் தருவதற்கு அரச அதிகாரிகளுடனான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டதோடு எழுத்துமூல உத்தரவாதம் வழங்கப்பட்டதாக தொழிற்சங்கம் அறிவித்தது.
இந்த உடன்பாட்டையடுத்தே தொழிற்சங்கப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாகவும் தொழிற்சங்கம் தெரிவித்தது.
இதற்கமைய எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை முதல் கடமைக்கு திரும்புமாறு பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் ஊடகச் செயலாளர் விஜயதிலக ஜயசிங்க, கல்விசாரா ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அமைச்சரவையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிய அதிகாரிகளுக்கிடையில் நேற்று மாலை பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இங்கு எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், இருதரப்புக்குமிடையில் எழுத்துமூலம் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பின்னர் கடந்த 31நாட்களாக தொடர்ந்த கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பல்கலைக்கழக செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவதற்காக ஊழியர்களை கடமைக்கு திரும்புமாறு இன்று அழைப்பு விடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் ஊடகச் செயலாளர் விஜயதிலக ஜயசிங்க தெரிவித்தார். சம்பள முரண்பாட்டை தீர்க்கும் வகையில் இரண்டு அமைச்சரவைப் பத்திரங்கள் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும், முதலாவது அமைச்சரவைப் பத்திரத்தை நிராகரித்திருந்த கல்விசாரா ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். அதன் காரணமாக இரண்டாவது அமைச்சரவைப் பத்திரம் கல்விசாரா ஊழியர்களுடன் கலந்துரையாடி தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறான பின்புலத்திலேயே நேற்றைய தினம் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஒருமாத காலத்திற்குள் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாக எழுத்துமூல உறுதியளிப்பின் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
தினகரன்