இலங்கை கல்வி நிர்வாக சேவையில் அடையாளங்காணப்பட்டுள்ள 852 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத்தேர்வு நேற்று (30) ஆரம்பமானது.
கல்வி நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சை நடைபெற்று ஏற்கனவே புள்ளிகள் வெளியாகிய நிலையில் சித்தி பெற்ற 163 பேருக்கு கடந்த 16ம் திகதி நியமனங்கள் வழங்கப்பட்டன. இது தவிர மேலும் 515 அதிகாரிகளை சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வே நேற்று ஆரம்பமானது. திறமைகள் அடிப்படையில் 118 அதிகாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இதேவேளை, ஆசிரியர் கல்வியியலாளருக்கான புதிய யாப்பிற்கு அதிகாரிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பமாகியுள்ளன. அதனடிப்படையில் தரம் iii இதுவரை பணியாற்றிய 11 அதிகாரிகள் தரம் ii இற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன் புதிய யாப்பிற்கமைய உள்வாங்கப்படவுள்ள 1190 அதிகாரிகளுக்கான போட்டிப் பரீட்சையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான நேர்முகத் தேர்வு விரையில் நடத்தப்படவுள்ளது.
இவ்வாண்டுக்குள் இலங்கை கல்வி சேவைக்குள் குறிப்பாக, ஆசிரியர் சேவை, அதிபர் சேவை, கல்வி கல்வியியலாளர் சேவை, இலங்கை கல்வி நிர்வாக சேவை என அனைத்து துறைகளிலும் காணப்படும் அனைத்து வெற்றிடங்களையும் தகுதியுடைவர்களை கொண்டு நிரப்புவதை நோக்கில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரகள் அறிவுறுத்தபட்டுள்ளனர் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.