
ஜோர்தான் நாட்டில் பல வருடங்களாக பணியாற்றி வந்த மல்லிக்கா பத்மலதா என்ற இலங்கைப் பெண் சுகயீனம் காரணமாக அந்நாட்டு அல் பஷீர் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.
பல நாட்கள் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றுவதற்கு தீர்மானித்திருந்தபோதிலும் அவரை மருத்துவமனையில் அனுமதித்த இலங்கை நண்பர்கள் எழுத்துமூலமாக குறித்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்காமையினால் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல் பஷீர் மருத்துவமனையின் வௌிநோயாளர் பிரிவில் பல நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வேறு சில இலங்கையர்களின் தலையீட்டில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இப்பெண் உயிரிழந்துள்ளார்.
பல வருடங்களாக ஜோர்தானில் பணியாற்றிய குறித்த பெண் அதிக தொகையான பணம் மற்றும் தங்க நகைகளை வைத்திருந்த போதும் அவற்றுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தற்போது எதுவித தகவல்களும் இல்லையெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உரிய நேரத்தில் உரிய முறையில் குறித்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டிருப்பின் அப்பெண்ணை காப்பாற்றியிருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இறந்த பெண்ணின் பூதவுடல் இன்னமும் நாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. அவ்வுடலை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வது சிறந்தது.
(ஜோர்தான் நாட்டில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய)
வேலைத்தளம்