கிழக்கு மாகாண தமிழ் மொழி மூல கல்வியியல் டிப்ளோமாதாரிகளுக்கு வௌி மாவட்டங்களில் நியமனம் வழங்கியமை தொடர்பில் கல்வியமைச்சருடன் உடனடியாக பேசவுள்ளதாக அகில இலங்கை வை.எம்.எம் ஏ பேரவையின் பொதுச்செயலாளர் ஸஹீட் எம் றிஸ்மி தெரிவித்துள்ளார்.
அண்மையில் கல்முனையில் இடம்பெற்ற பேரவையின் விசேட ஒன்றுகூடலில் கலந்துகொண்டு கருத்து தெரித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே ஆசிரியர் வெற்றிடங்களும் பற்றாக்குறையும் நிலவும் நிலையில் இவ்வாறு வௌிமாவட்டங்களில் நியமனம் வழங்கியமை அநீதியான செயலாகும்.
ஆசிரியர்களின் விருப்பு வெறுப்புகளில் நியாயமானவற்றை இனங்கண்டு அதற்கான சரியான தீர்வுகளை வழங்குவது கல்வியமைச்சின் கடமை. அவ்வாறு செய்யப்படுமாயின் மட்டுமே நாட்டின் கல்வியிலக்கை அடையலாம். ஏற்கனவே வெற்றிடங்கள் இருக்கும் சொந்த மாகாணத்தில் அம்மாகாணத்தை சேர்ந்தவர்களை நியமிக்காது வௌிமாகாணத்தில் நியமனம் வழங்குவது பிரச்சினைக்குரிய விடயம்.
பொறுப்பான அமைப்பு என்றவகையில் உரிய அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்பில் கதைத்து உரிய தீர்வை பெற்றுக்கொடுப்போம். அதேபோல் தற்போது கிழக்கில் ஏற்பட்டுள்ள மௌலவி ஆசிரியர் நியமன பிரச்சினை தொடர்பிலும் உரிய தரப்பினரிடம் பேசவுள்ளோம்.
பாதிக்கப்பட்டோர் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியினூடாக அல்லது செயலாளரின் 077 7391691 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு அறிவிக்கலாம் என்றும் அவர் மேலும் தெரித்துள்ளார்.