கிழக்கு தபால் பணியாளரின் சம்பள நிலுவைகளை வழங்கமாறு கோரி நேற்று (28) மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்பபாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
அந்த போராட்டத்திற்கு அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் சேவையாளர் சங்கம் உள்ளிட்ட ஏனைய சில தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கியுள்ளன.
இந்த கவனயீர்ப்பு பேரணி மட்டக்களப்பு பிரதம தபால் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகி அரசடியிலுள்ள கிழக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபரின் பணிமனை முன்பாக நிறைவுபெற்றது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை கிழக்குமாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் திருமதி ஜெயந்தி திருச்செல்வத்திடம் கையளித்தனர்.
குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
2006ஆம் ஆண்டுக்கு பின்னர் நியமனம் பெற்ற தபால் ஊழியர்களுக்கு 2010ஆம் ஆண்டு கடந்த அரசாங்கத்தினால் சம்பளம் குறைக்கப்பட்ட போதிலும் அது கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் அதிகளவான சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறி ஒரு தொகை பணம் ஊழியர்களிடம் இருந்து மீளப்பெறப்பட்டிருந்தது, இது எமக்கு கடந்த காலத்தில் செய்யப்பட்ட பெரும் அநீதி என குறிப்பிட்டுள்ளனர்.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தபாலகங்களில் கடமையாற்றும் 104 பேருக்கு சுமார் 87 லட்சம் ரூபா வழங்க வேண்டியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் ஒருவருக்கு 4,000 ரூபா வழங்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் சேவையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சீ.உமேஸ்காந்த் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்திற்கொண்டு தமக்கான சம்பளத்தைப் பெற்றுத்தர வேண்டும் எனவும், அது தவறும் பட்சத்தில் தலைமை தபால் காரியாலயத்திற்கு முன்பாக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த நேரிடும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.