கடந்த அரசாங்கத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் தவறுகள் இடம்பெற்றிருப்பதை நாம் அவதானித்துள்ளோம். அவ்விடயம் தொடர்பில் தற்போதைய அமைச்சர் மற்றும் ஆளுநர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்று கிழக்கு மாகாண தொண்டராசிரியர் சங்கத்தின் தலைவர் தில்லையம்பலம் கரிஸ்ரன் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த அரசாங்கத்தில் 762 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. இதில் 98 சிங்களவரகளும், 283 தமிழர்களும் 383 முஸ்லிம்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 18ம் திகதி இவ்விடயம் தொடர்பில் நாம் ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனுவை சமர்ப்பித்தோம். இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தருவதாக அவர் கூறியுள்ளார்.
கல்வியமைச்சின் சுற்றுநிரூபத்தில் 2007ம் ஆண்டுக்கு முன்னர் தொடர்ச்சியாக 3 வருடங்கள் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருத்தல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததற்கமைவாக நியமனம் கிடைக்காது பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களை எமது சங்கம் 2018ம் ஆண்டு நேர்முகப்பரீட்சையில் தோற்றியவர்கள், 2018ம் ஆண்டுக்கு முன்னர் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியவர்கள் மற்றும் எதுவித நேர்முகப்பரீட்சைக்கும் தோற்றாதவர்கள் என 3 பிரிவுகளாக பிரித்து பட்டியல்படுத்தியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் காரணமாக சில விடயங்கள் தாமதமாகிய போதிலும் தற்போது மிக வேகமாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால் பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் மனச்சோர்வு அடையாது, போராட்டங்களில் ஈடுபடாது அமைதி காக்குமாறு அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.