பொருத்தமில்லாத காலப்பகுதியில் கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் இடம்பெறுவதாக தமிழ் ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
ஆசிரியர் மாற்றத்திற்கான தேசியக்கொள்கையை பின்பற்றாமல் இடமாற்றம் வழங்குவது எந்தவிதத்தில் நியாயமான செயல் என்று தமிழ் ஆசிரியர் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தேசிய கொள்கை அல்லது மாகாணத்திற்குப் பொருத்தமான கொள்கையமைப்பைப் பின்பற்றியோ ஆசிரியர் வருடாந்த இடமாற்றம் வழங்கப்படவேண்டும். எனினும் இரு வகையான கொள்கைகளும் பின்பற்றப்படாமல் கிழக்கு மாகாணத்தில் வருடாந்த இடமாற்றம் நடைபெறுகிறது. இது ஆசிரியர், அதிபர், மாணவர்கள் மற்றும் அலுவலர்களை பெறும் குழப்பத்தில் ஆற்றுகிறது. வருட இறுதியில் இடமாற்றம் எங்குமே இடம்பெறாது.
தேசிய இடமாற்றக் கொள்கைக்கமைய இடமாற்றத்தை விரும்பும் ஆசிரியர்கள் நடப்பு வருட நடுப்பகுதியில் அதாவது மே, ஜூன் மாதங்களில் தமக்கான இடமாற்றத்தைக் கோரி வலய கல்விப்பணிப்பாளர்களிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்விண்ணப்பங்களை பரீசீலிக்கும் மாகாண கல்வித் திணைக்களத்தின் இடமாற்றப் பட்டியல் ஓகஸ்ட் மாதத்தில் மீண்டும் வலய கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். அதில் மாற்றங்கள் இருப்பின் உள்வாங்கப்பட்டு இறுதி பட்டியல் நவம்பர் மாதம் விடுமுறைக்கு முன்னர் உரிய ஆசிரியர்களுக்கு இடமாற்ற வழங்கப்படவேண்டும்.
இச்செயற்பாடானது புதிய பாடசாலைகளில் புதிய பாட ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு ஆசிரியர், அதிபர் மற்றும் மாணவர்கள், நிருவாக அலுவலர்களுக்கும் இலகுவாக இருக்கும். எனினும் எவ்வித நிருவாக ஒழுங்குமின்றி கிழக்கு மாகாணத்தில் வருட நடுப்பகுதியில் இடமாற்றம் வழங்கப்படுவதானது அனைவரினதும் நிருவாக செயற்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அம்பாறை மாவட்ட ஆசிரியர் குழாமொன்று இத்தகைய செயற்பாட்டுக்கு நீதி கோரி நீதிமன்றை நாடியுள்ளது. அவர்களுடைய இடமாற்றத்தை நிறுத்துமாறு நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
எனவே இத்தகைய குழப்ப நிலைகளுக்குத் தீர்வுகாண கிழக்கு மாகாணத்தில் உரிய இடமாற்றக்கொள்கை உருவாக்குவது அத்தியவசியம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.