சுமார் ஐந்தாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணியைக் கொண்டுள்ள மத்துகம, கீக்கியனகந்த தோட்டம் மூடப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கீழ்ப்பிரிவு, மேற்பிரிவு, குடலிகம, நாகல்ல என நான்கு பிரிவுகளுடன் சுமார் ஐயாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணியைக் கொண்டுள்ள இந்தத் தோட்டத்தில் தேயிலை, இறப்பர் பிரதான பயிர்ச் செய்கைகளாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் தற்பொழுது பாம் ஒயில் பயிர்ச் செய்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இங்கு இயங்கிவந்த தேயிலை, இறப்பர் ஆலைகள் இரண்டும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்டு விட்டன. இங்கு பறித்தெடுக்கப்படும் தேயிலைக்கொழுந்து வோகன் தோட்ட ஆலைக்கும் சேகரிக்கப்படும் இறப்பர் பால் அரப்பொலகந்த தோட்ட ஆலைக்கும் கொண்டு செல்லபடுகிறது.
தோட்ட அலுவலகத்தில் கடமையாற்றி வந்த பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு வேறு தோட்ட அலுவலகங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். இதனால் தோட்ட அலுவலகமும் மூடப்படும் நிலை காணப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறிருக்க தோட்டக்காணி பெரும்பாலும் வெளியாரினால் தோட்ட எல்லைப்புறங்களிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்டு தேயிலைப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பை தோட்ட நிர்வாகம் அறிந்திருந்த போதிலும் தெரியாதது போலவே நடந்து கொள்கிறது. மேலும் பல ஏக்கர் காணி கைவிடப்பட்டு காடாக மாறிய நிலையிலும் காணப்படுகிறது.
இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்ற போதிலும் குடிநீர், மலசல கூட வசதியற்றவர்களாகவும் குடியிருந்து வரும் லயன் குடியிருப்புக்கள் நீண்டகாலமாகத் திருத்தியமைத்துக் கொடுக்கப்படாத நிலையிலும் பெரும் சிரமத்துக்கு மத்தியில் வசித்து வருவதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வேலைத்தளம்-/நன்றி- வீரகேசரி