கூட்டு ஒப்பந்தங்களால் மெல்லச் சாகும் பெருந்தோட்டங்கள்

இலங்கையின் பொருளாதார, சமூகக் கட்டமைப்பில், பிரத்தானியரின் வருகை பல பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. பிரத்தானியர் ஆட்சியின் இறுதிக் காலத்தில், நாட்டின் பிரதான வருவாயை ஏற்படுத்திக் கொடுக்கும் தொழிற்றுறையாக, பெருந்தோட்டக் கைத்தொழில் காணப்பட்டதோடு, தேயிலை, தென்னை, இறப்பர் என்பன, பெருந்தோட்டத் துறையின் பயிர்களாக இருந்தன.

நாட்டில் ஆட்சிப் பீடமேறிய அரசாங்கங்களும் ஆட்சியாளர்களும், பெருந்தோட்டத் தொழிற்றுறையில் ஈடுபடும் பெருந்தோட்டச் சமூகத்தை வஞ்சித்து வருவதால், பிரித்தானியர் காலத்தில் இலங்கைப் பொருளாதாரத்தில் முன்னிலை வகித்த பெருந்தோட்டத் தொழிற்றுறை, இன்று பின்தள்ளப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிற்துறையை மேவிக்கொண்டு, சுற்றுலாத்துறை, ஆடைக் கைத்தொழில் என்பன முன்னிலை வகிக்கின்றன.

இத்துறையின் வீழ்ச்சிப்போக்கு, ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியது. பெருந்தோட்டத் தொழிற்றுறை என்பது, வெறுமனே ஒரு தொழிற்றுறையாக மாத்திரமல்லாது, ஒரு சமூகத்தின் இருப்பாக இருப்பதால், இந்த வீழ்ச்சி பற்றிய தேடல் முக்கியமானது.

பிரித்தானியரின் நிர்வாகத்தின் கீழ், பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகவிருந்த காணிகள், 1972ஆம் ஆண்டு காணி மறுசீரமைப்பு சட்டத்தின் மூலமாக, அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. அரசாங்கம் வசமிருந்த பெருந்தோட்டக் காணிகள், 1992ஆம் ஆண்டு 23 தனியார் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை ஆகிய அரச திணைக்களங்கள் என மொத்தமாக 25 நிறுவனங்களுக்கு, 99 வருடங்கள் குத்தகையின் அடிப்படையில் தேயிலை, தென்னை, இறப்பர் ஆகிய பயிர் நிலங்கள் வழங்கப்பட்டன.

மேற்குறித்த சில கம்பனிகளின் உரிமம், மாற்றம் பெற்றுள்ளன. இதேவேளை, பெருந்தோட்டக் கம்பனிகள் சிலவற்றின் பெயரும் உரிமமும் மட்டுமே சில கம்பனிகளில் மாற்றம் கண்டுள்ளன.

இப்பெருந்தோட்டக் கம்பனிகள் தொடர்பில், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சிடமிருந்து, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முக்கியமான சில தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வருடம் ஜனவரி 27ஆம் திகதி விண்ணப்பித்திருந்த தகவல் கோரிக்கைக்கு, ஜூலை 21ஆம் திகதியே பதில்கள் கிடைத்தன. தமிழ் மொழியில் தகவல்கள் கோரப்பட்டிருந்த போதிலும், ஆங்கில மொழியிலேயே தகவல்கள் கிடைத்துள்ளன.

23 பெருந்தோட்டக் கம்பனிகளில் (RPC), சிலாபம், குருநாகல் ஆகிய இரு கம்பனிகளைத் தவிர்ந்த ஏனைய 21 கம்பனிகளே, தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்றன. அக்கரப்பத்தனை கம்பனி தேயிலையையும் சிலாபம் கம்பனி – தென்னையை மாத்திரமும் பயிர்ச் செய்கின்றன. 23 கம்பனிகளில் 18 கம்பனிகள், தேயிலை, தென்னை, இறப்பர் மூன்று பயிர்களையும் உற்பத்திச் செய்கின்றன.

மலையகத்தில் எத்தனை தோட்டங்கள் உள்ளன?

23 கம்பனிகள் தொடர்பான தகவல்களைக் கோரியிருந்த போதிலும், 20 கம்பனிகளின் தகவல்களே தரப்பட்டுள்ளன. சிலாபம், எல்கடுவ, குருநாகல் ஆகிய கம்பனிகளில் உள்ள தோட்டங்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வழங்கப்படவில்லை என்பதால், தகவல்கள் வழங்கப்பட்டுள்ள கம்பனிகளின் அடிப்படையிலேயே தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்திலேயே, ஏனைய மாவட்டங்களைவிட அதிகளவான (128) தோட்டங்கள் காணப்படுகின்றன. (தோட்டங்கள் ஒவ்வொன்றும் சுமார் 5 அல்லது 5க்கும் மேற்பட்டப் பிரிவுகளைக் கொண்டிருக்கும்) இரண்டாவதாக, பதுளையில் 67 தோட்டங்கள் காணப்படுகின்றன. ஆகக் குறைவான தோட்டங்களைக் கொண்ட மாவட்டமாக, மாத்தளை மாவட்டம் காணப்படுகின்றது. மாத்தளை – யட்டவத்த தோட்டம், உடபுஸ்ஸல்லாவ கம்பனியால் நிர்வகிக்கப்படுகிறது.
(நுவரெலியா – ஹங்குரங்கெத்த பிரதேசத்திலும் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் அதிகமான பிரதேசங்களிலும் உள்ள பெருந்தோட்டங்கள், அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன)

தொழிலாளர்களின் எண்ணிக்கை

23 பெருந்தோட்டக் கம்பனிகளின் பல்வேறு காரணிகள் காரணமாக, தொழிலாளர் பரம்பல் குறைவடைந்து வருகின்றது. இதற்கு, கூட்டு ஒப்பந்தச் சம்பள நிர்ணய முறைமை, மிகப் பிரதான காரணமாக அமைந்துள்ளது. இதனை, மத்திய வங்கியின் அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பள நிர்ணயச் சபை சட்டத்தின் கீழ் சம்பளம் நிர்ணயிக்கப்படும் தொழிற்றுறைகளில், தொழிலாளர் பரம்பல் அதிகரித்துச் செல்கின்ற விடயம் குறித்தும், அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

கடந்த 9 வருடங்களுக்கு முன்பு, 2 இலட்சத்து 2 ஆயிரத்து 48ஆகக் காணப்பட்ட தொழிலாளர்கள் எண்ணிக்கை (202,448), 2018ஆம் ஆண்டில் 1 இலட்சத்து 34 ஆயிரத்து 463ஆக (134,463)குறைவடைந்துள்ளது. 2014ஆம் ஆண்டில் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 2 இலட்சத்து 31 ஆயிரத்து 660ஆக (231,660) அதிகரித்திருக்கின்றது. 2009ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2014ஆம் ஆண்டில் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 29 ஆயிரத்தால் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
தேயிலை உற்பத்தியில், தற்போதைய சர்வதேச கேள்வியை ஈடுசெய்யும் தரப்படுத்தலில், இலங்கை நான்காம் இடத்தில் உள்ளது. சீனா முதலாம் இடத்திலும் இரண்டாம் இடத்தில் இந்தியாவும், ஆபிரிக்க நாடான கென்யா மூன்றாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அக்கரப்பத்தனை பெருந்தோட்டக் கம்பனியில், 2009ஆம் ஆண்டு 16,173 தொழிலாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், 2018ஆம் ஆண்டில், அவர்களின் எண்ணிக்கை 9,701ஆகக் குறைவடைந்துள்ளது. 6,472 தொழிலாளர்கள் குறைவடைந்துள்ளனர். சிலாபம், எல்கடுவ ஆகிய கம்பனிகளே, ஆகக் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட கம்பனிகளாக இருக்கின்றன.

இலங்கையில் தேயிலை பயிரிடப்படும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பந்தோட்டை, குருநாகல், பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய 14 மாவட்டங்களில், அதிக தேயிலை விளைச்சலுடைய மாவட்டமாக நுவரெலியா மாவட்டமும் குறைந்த விளைச்சலுடைய மாவட்டமாக குருநாகல் மாவட்டமும் காணப்படுகின்றது.

கடந்த 5 வருடங்களில் தேயிலை மீள் நடுகையானது, சிறுதோட்ட உடமையாளர்களிடத்தில் 1,027 ஹெக்டெயராகக் காணப்படுகின்ற அதேவேளை, பெருந்தோட்டக் கம்பனிகளின் மீள் நடுகை, வெறுமனே 257 ஹெக்டெயராகக் காணப்படுகின்றது.

இதுவும், இந்தத் தொழிலாளர் பரம்பலின் வீழ்ச்சிக்குக் காரணமாகும். சிறுதோட்ட உடமையாளர்களின் (Small Holders) எழுச்சி, இன்றைய தேசிய, சர்வதேச கேள்வியை ஈடுசெய்வதாக அமைகிறது.

2007ஆம் ஆண்டில், 90,752 ஹெக்டெயர் பெருந்தோட்டப் பகுதிகளில் தேயிலை பயிரிடப்பட்டிருந்த அதேவேளை, 2018இல் அது, 77,553 ஹெக்டெயராகக் குறைவடைந்துள்ளது. ஆனால், 2007ஆம் ஆண்டில் சிறுதோட்ட உடைமையாளர்களால் 119,492 ஹெக்டெயரில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், 2018இல் அது, 122,448ஆக அதிகரித்தது.

பெருந்தோட்டப் பகுதிகளில், 13,199 ஹெக்டெயர் நிலப்பகுதி, பயிரிடப்படாத தரிசு நிலங்களாகியுள்ளன. அதுவும், இந்தத் தொழிலாளர் பரம்பலைப் பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், சிறுதோட்ட உடமையாளர்கள் பயிரிடப்படும் நிலம், 2,956 ஹெக்டெயராக அதிகரித்துள்ளது. இதேபோன்றதொரு நிலைமையே, ஏனைய இறப்பர், தென்னை ஆகிய தொழிற்றுறைகளிலும் காணப்படுகின்றன.

தனியார் ஊழியர்களின் வேலைநிறுத்தங்கள் தொடர்பான தொழில் திணைக்களத்தின் தகவல்படி, பெருந்தோட்டங்களிலேயே கடந்த பத்து வருடங்களில், அதிகளவான வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இலங்கையின் வேலைநிறுத்த வரலாற்றில், பெருந்தோட்டங்களிலேயே அதிகளான வேலைநிறுத்தங்கள் ஏற்படுவதாகப் பதிவாகியுள்ளது.

இதன்படி, 2018ஆம் ஆண்டிலேயே அதிகளவான (29) போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த வேலைநிறுத்தப் போராட்டங்கள் அனைத்தும், பெருந்தோட்டங்களிலேயே நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வைக் கோரியிருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, வெறும் 20 ரூபாய் சம்பள அதிகரிப்பே வழங்கப்பட்டுள்ளதாகவும், மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வீழ்ச்சிக்குப் பிரதான காரணம், கூட்டு ஒப்பந்தமென்றும், அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையே, கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது. இதன்படி, வருடமொன்றுக்கு வெறும் 10 ரூபாய் சம்பள அதிகரிப்பே வழங்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை, தொழிற்சங்கங்கள் ஒருபோதும் அதிகரித்ததில்லை என்பதற்கு இதுவே சாட்சி.
ஆக, பெருந்தோட்டத்துறையின் வீழ்ச்சிக்குக் காரணமான தொழிலாளர்களின் எண்ணிக்கையும், கடந்த 9 வருடங்களில் வீழ்ச்சியடைந்து இருப்பதற்கு, இதய சுத்தியற்ற பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களின் பங்கும் நேரடியாகவே இருக்கிறது.

பா. நிரோஷ் – தமிழ் மிரர் 07.10.2020

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435