பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படை சம்பளத்தை தவிர்த்து, ஏனைய சில விடயங்களில் தொழிற்சங்கங்கள் நெகிழ்வுத் தன்மையை வெளிப்படுத்தி இருப்பதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
முதலாளிமார் சம்மேளனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொழிற்சங்கங்கள் இருக்கின்றன.
ஆனால் இதனைத் தவிர்த்து மூன்று முக்கியமான விடயங்களில் தொழிற்சங்கங்கள் நெகிழ்வுத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது கடந்த நான்கு மாதங்களாக இடம்பெறும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக தொழிற்சங்களிடம் இருந்து கிடைத்துள்ள சாதகமான மாற்றம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, வரவுக்கான கொடுப்பனவும், வினைத்திறன் கொடுப்பனவு மற்றும் விலை பங்கீட்டு கொடுப்பனவு ஆகிய விடயங்களில் முதலாளிமார் சம்மேளனம் சில யோசனைகளை முன்வைத்திருப்பதாகவும், அந்த விடயத்தில் சிறிய இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தொழிற்சங்கங்கள் இந்த விடயத்தில் இன்னும் இறுதி தீர்மானத்துக்கு வரவில்லை என்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிமூலம்: சூரியன் செய்திகள்