
கூட்டு ஒப்பந்த முறையை ஒழித்து சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
அந்த கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் (17) இடம்பெற்ற தொழில் அமைச்சு தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு வலியுறுத்தினார்.
கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாளொன்றுக்கு 750 ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது. அதாவது 20 நாட்களுக்கு குறைவாக அவர்கள் வேலை செய்தால் மாதம் ஒன்றுக்கு பதினைந்தாயிரம் ரூபாவையே தோட்டத் தொழிலாளர்கள் பெறுகின்றனர்.
25 நாட்களுக்கும் மேலாக அவர்களால் வேலை செய்ய முடிந்தாலும் உடல்நிலை அதற்கு ஒத்துழைப்பதில்லை, அதனையும் மீறி அவர்கள் தொழில் செய்தால் அற்ப ஆயுளில் மரணிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவார்கள்.
இதன் காரணமாகவே தோட்ட தொழிலாளர்கள் அற்ப ஆயுளில் மரணிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர்., இதற்கு கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் சம்பளம் பெறும் நிலைமையே பிரதான காரணம்.
எனவே கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் சம்பளம் வழங்கும் முறையை மாற்றியமைக்க வேண்டும், அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்களும் தொழிலாளர்கள் நன்மை கருதி அதிலிருந்து விலக வேண்டும். கூட்டு ஒப்பந்த முறை ஒழிக்கப்பட்டு அதற்கு மாற்றீடாக சம்பள நிர்ணய சபையின் ஊடாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
பதுளை தொழில் காரியாலயத்தில் ஏற்படும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு அதனை சகல வசதிகளுடன் மாற்றியமைக்க வேண்டும் என அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தோட்ட தொழிலாளர்கள் தமது சேமலாப நிதியை பெற்றுக்கொண்டுள்ள இன்றும் தரகர்களை நாட வேண்டிய துர்பாக்கிய நிலை இன்னமும் நிலவுகிறது. இதனை முற்றாக மாற்றவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.