கொரோனா தொற்று காரணமாக இத்தாலியில் வசித்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று காரணமாக இத்தாலியில் இறக்கும் முதலாவது இலங்கையர் இவராவார்.
இத்தாலியின் மிலான் நகரில் வசித்த இலங்கையரே இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் என நகர மேயர் தெரிவித்துள்ளார்.
குருணாகல பிரதேசத்தை சேர்ந்த குறித்த 56 வயது நபர் நீண்டகாலமாக இத்தாலியில் குடும்பத்துடன் வசித்து வந்தவராவார்.
அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்நபரது இறுதித் கிரியைகள் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கு அமைய முன்னெடுக்கப்படும் என்று மிலான் நகர சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக இத்தாலியில் உயிரிழந்த முதலாவது இலங்கையர் இவராவார் என அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இத்தாலியில் ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாம் அலை அதிகமாக தாக்கியுள்ள லொம்பார்தியா பிரதேசத்தில் உள்ள மிலான் நகரத்தை சூழ வசிக்கும் பல இலங்கையர்கள் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் அவர்களுக்கான நலன்புரி குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.