சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் தாய்நாட்டுக்கு திரும்புவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் மூன்று மாத பொது மன்னிப்புக்காலத்தை வழங்கவுள்ளது.
நேற்று (15) தொடக்கம் அமுலுக்கு வரும் வரையில் அறிவிக்கப்பட்டுள்ள இப்பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டவிரோதமாக சவுதியில் தங்கியிருந்து பணியாற்றுபவர்கள் எவ்வித தண்டனையும் இன்றி சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
தொழில் நிமித்தம் சென்றவர்கள் மாத்திமன்றி ஹஜ் நிமித்தம் சவதி சென்ற பலரும் சட்டவிரோதாக அந்நாட்டில் தங்கியிருந்து பணியாற்றுகின்றமை அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சவுதி அரசு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை இப்பொது மன்னிப்புக்காலம் அமுலில் இருக்கும் என்றும் இக்காலப்பகுதியில் குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள், போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் தவிர்ந்த அனைவரும் எவ்வித தண்டனையும் பெறாமல் நாடு திரும்பலாம் என்று சவுதி குடியுரிமை அமைச்சு அறிவித்துள்ளது.
வீசா காலம் முடிந்த பின்னரும் நாட்டில் தங்கியுள்ளவர்கள் கைரேகை உள்ளிட்ட உரிய ஆவணங்களை சவுதி தொழிலாளர் அலுவலகத்தில் கையளித்து அங்கிருந்து பெற்றுக்கொள்ளும் ஆவணங்களை குடியுரிமை அமைச்சிடம் சமர்ப்பித்து தாய்நாட்டுக்கு திரும்புவதற்கான பணிகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
பொது மன்னிப்பு காலம் முடிந்த பின்னரும் சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வௌிநாட்டவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளமையினால் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.