சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட 80 இற்கும் மேற்பட்ட நபர்கள் பஹ்ரைனில் கைது செய்யப்பட்டுள்னளர்.
கடந்த 18 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இந்நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 9ம் திகதி வரை நடாத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மட்டும் 19 பேர் கைது செய்யப்பட்டனர் என பஹ்ரைன் உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 33 பெண்களும் 33 ஆண்களுமாக 67 பேர் கைது செய்யப்பட்டனர் என்று அந்நாட்டு ஆட்கடத்தலுக்கு எதிரான மற்றும் பொது ஒழுக்க விழுமியங்கள் பதில் பணிப்பாளர் லெப்டினன்ட் கர்னல் அப்துல் வஹாப் ரஷீட் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த ஐந்து மாதங்களாக நடாத்தப்பட்டு வரும் தேடுதல் நடவடிக்கையில் ஆட்கடத்தல் மூலம் பாதிக்கப்பட்ட 19 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் கடந்த ஆண்டு மட்டும் ஆட்கடத்தல் செயற்பாட்டினால் பாதிக்கப்பட்ட ஒரு ஆண் உட்பட 38 பேர் மீட்கப்பட்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு மீட்கப்பட்ட 38 பேரும் வேறு வேறு நாட்டைச் சேரந்தவர்கள் என்றும் அவ்வாட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற பெயரில் கைது செய்யப்பட்ட 67 சந்தேகநபர்களில் 34 பெண்களும் 33 ஆண்களும் உள்ளடங்குகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஆட்கடத்தல் தொடர்பான தகவல்கள் ஆட்கடத்தல் முறைப்பாடுகளுக்கான உடனடி இலக்கமான (17718888) ஊடாக முறையிடப்படுவதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு விசாரணையின் பின்னர் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் கண்டறியப்படுவதற்கு உரிய அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்படுமாயின் 10 வருட சிறைத்தண்டனையும் 10,000 பஹ்ரைன் டினார் அபராதமும் விதிக்கப்பபடும். மேலும் ஆட்கடத்தல் நடவடிக்கைக்கு எதிராக செயற்படுவதற்கான புதிய பிராந்திய மத்திய நிலையமொன்று கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. தொழிற்சந்தை ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு ( Labour Market Regulatory Authority (LMRA) மற்றும் ஐநா உயர்மட்டக்குழுவுன் தலைமையில் இப்பிராந்திய மத்திய நிலையம் செயற்படுகிறது. கடந்த ஆறு மாத காலத்தில் இம்மத்திய நிலையத்தின் தலையீட்டினால் மட்டும் 22 சம்பவங்கள் பொது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு இணையதள ஊடகமான GDNonline கடந்த வாரம் வௌியிட்டுள்ள தகவலுக்கமைய கடந்த 5 வருடங்களாக பஹ்ரைனில் 45 மனிதவள முகவர் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் அவற்றில் 13 முகவர் நிலையங்களுக்கு எதிராக ஆட்கடத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நீதிமன்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.