ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு இவ்வருடத்திற்கான சம்பளம் வழங்க மாதாந்தம் 48,000,000 ரூபாவை திரைசேரியிலிருந்து வழங்குமாறு தகவல் ஊடக அமைச்சு கோரியுள்ளது.
அதற்கான அனுமதியை வழங்குமாறு தகவல் ஊடக, உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவை அனுமதிக்கான பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நிதிப்பிரச்சினை ஏற்பட்டுள்ளமையினால், அரச நிகழ்ச்சிகளை வழங்க இலவசமாக வழங்கப்படும் நேரத்தின் பெறுமதியை கவனத்திற்கொண்டு இத்தொகையை வழங்குமாறு அமைச்சு கோரியுள்ளது.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் 930 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு மாதாந்தம் 5 கோடி ரூபா நிதி செலவிடப்படுகிறது. இதுதவிர ஏனைய கொடுப்பனவுகளுக்கு மட்டும் 4 கோடி ரூபா செலவாகிறது.
கடந்த 2017ம் ஆண்டு ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினால் 40 கோடி ரூபா பெறுமதியான காலமும் 2018ம் ஆண்டு 44 கோடி ரூபா பெறுமதியான காலமும் அரசாங்க நிகழ்வுகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. இதற்கான எவ்வித கொடுப்பனவும் அனுசரனையும் பெறப்படவில்லை என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.