கொழும்பிலுள்ள ஒத்துழைப்பு நிறுவனமும் (Solidarity Center) வேலைத்தளங்களில் பெண்களுக்கான சம உரிமைகள் தொடர்பான யாழ் மாவட்டத்துக்கான உப குழுவும் இணைந்து நடாத்திய பயிற்சியாளர்களுக்கான பயிற்சி 2016, டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய தினங்களில் நீர்கொழும்பிலுள்ள ஜெட்விங் லகூனில் “பால்நிலை சமத்துவம் மற்றும் கண்ணியமான தொழில்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.
வடக்கில், பெருமளவான பெண்கள் வேலைக்குச் செல்கின்ற தற்போதைய போருக்குப் பின்னான காலப்பகுதியில், வேலைத்தளங்களில் பெண்களுக்கெதிராக இடம்பெறும் பால்நிலை சார் வன்முறையானது, நாட்டினது, குறிப்பாக வடக்கின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற முக்கிய காரணியாக உள்ளது. ஆகவே, தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதும், பெண்களுக்குப் பாதுகாப்பானதான வேலைத்தளங்களை உறுதிப்படுத்துவதும் அத்தியாவசியமானதாகும்.
ஆகவே, ஒத்துழைப்பு நிறுவனமானது வேலைத்தளங்களில் பெண்களுக்கான சம உரிமைகள் தொடர்பான யாழ் மாவட்டத்துக்கான உப குழு அங்கத்தவர்களினதும் சட்ட நிபுணர்களினதும் திறனை அதிகரிப்பதற்காகவும் சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் (ILO) கண்ணியமான வேலைத் திட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் வேலைத்தளங்களில் ஏற்படும் பால்நிலை சார் வன்முறைகளை எதிர்க்கவும் மேற்படி பயிற்சியை ஒழுங்கு செய்திருந்தது. இப்பயிற்சியின் முக்கிய நோக்கமானது, நிபுணத்துவம் வாய்ந்த குழுவொன்றை உருவாக்குவதன் மூலம் யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தொழிற் துறைகளில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை தோற்றுவிப்பதாகும்.
இப்பயிற்சியின் முடிவில் அடுத்த வருடத்துக்கான செயற்றிட்டம் பங்கேற்பாளர்களால் தயாரிக்கப்பட்டது. பிரச்சாரச் செயன்முறைக்கான இலக்கு குழுக்களாக உயர் கல்வியகங்கள், போதனா வைத்தியசாலை, மற்றும் பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டத்துடன், பிரச்சார நடவடிக்கைகளின் கருப்பொருட்களாக கண்ணியமான வேலைச் சூழலை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம், பால்நிலை உற்பத்தித் திறன் அதிகரிப்பும், வேலைத்தளங்களில் ஏற்படும் பாலியல் தொந்தரவுக்கெதிரான சட்டங்கள் ஆகியன இனங்காணப்பட்டன.