
சவுதி அரேபியாவில் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் தொழில்வாய்ப்பை மேலும் விரிவுபடுத்துமாறு அந்நாட்டு சபாநாயகர் அப்துல்லா பின் மொஹம்மட் இப்ராஹீம் அல் ஷெயினிடம் இலங்கை சபாநாயகர் கரு ஜயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று (09) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சபாயநாயகர் கரு ஜயசூரியவுக்கும் சவுதி சபாநாயகர் மற்றும் அவருடைய குழுவினருக்கும் இடையிலான சந்திப்பின்போதே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கையர்களின் எண்ணிக்கை சுமார் அறுபதாயிரமளவில் குறைவடைந்துள்ளது. பயிற்சி பெற்ற இலங்கையர்களை சவுதி அரோபியாவில் தொழில் நிமித்தம் அனுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளது. எனவே இலங்கையர்களுக்கான தொழில்வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இச்சந்திப்பில் கரு ஜயசூரிய சவுதி சபாநாயகரிடம் வேண்டுகோள்விடுத்தார்.
மேலும், சவுதியில் பணியில் ஈடுபட்டிருக்கும் போது ஏதாவது ஒரு காரணத்தினால் உயிரிழக்கும் இலங்கையர் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் சபாநாயகர் கரு ஜயசூரிய சவுதி சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.