
கடந்த வாரம் சவுதி அரேபியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இலங்கை தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் உப்புல் தேசப்பிரிய தெரிவிதுள்ளார்.
குறித்த பெண் இறந்தமை தொடர்பான விடயங்கள் சமூக வலைத்தளங்களினூடாகவே முதலில் வௌியானது. இந்நிலையில் உயிரிழந்த பெண் தொடர்பில் ஆராய்ந்த சவுதிக்கான இலங்கை தூதரகம் குறித்த பெண் உள நலம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்ததாக பணியகம் தெரிவித்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தவதற்கான சான்றிதழ்களுடன் பூதவுடல் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது என்று தெரிவித்துள்ள பணியக செயற்பாட்டுப் பணிப்பாளர், குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் குடும்பத்தினருக்கு சந்தேகமிருப்பின் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க பணியகம் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், சமூக வலைத்தளங்களில் சவுதி அரேபியாவில் உள்ள ஒலேய்யா முகாம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அந்நாட்டில் சட்டவிரோதமாக பணியாற்றுவோர், பிரச்சினைக்கு முகம் கொடுப்போருக்கு தற்காலிகமாக அடைக்கலம் வழங்கும் வகையிலேயே இந்நலன்புரி முகாம் நிறுவப்பட்டுள்ளது. இம்முகாமில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர், தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பல்வேறு வதந்திகள் நிலவுகின்றன. அங்கு சுமார் 82 பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பில் பணியகம் கவனம் செலுத்துகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மஸ்கெலியா – சாமிமலை பகுதியைச் சேர்ந்த பழனியாண்டி கற்பகவள்ளி என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.