சவுதி அரேபியாவிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்று உயிரிழந்த கெகிராவையைச் சேர்ந்த நெல்கா தீபானி குமாரசிறி என்ற பெண்ணின் சடலத்தை நாட்டுக்கு கொண்டுவருவதில் ஒருமாத காலம் தாமதமேற்பட்டுள்ளதாக அவருடைய மகன் தெரிவித்துள்ளார்.
பணியில் இருந்தபோது மூன்று மாடிக்கட்டிடத்தில் இருந்த விழுந்த கடந்த 3 வருடங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு உயிரிழந்தவரின் சடலமே இன்னும் உறவினரிடம் கையளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
கித்துல்ஹிட்டியாவ, உளுகெட்ட வெவ வீதி, கெகிராவ என்ற முகவரியைச் சேர்ந்தவரே இவ்வாறு சவுதியில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் அவருடைய மகனான என்.கே. ஏ கனுஷ்க என்பவர் விபரிக்கையில், கடந்த 2011ம் ஆண்டு எனது அம்மா சவுதி அரேபியாவிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்றார். மீண்டும் 2013ம் ஆண்டு நாடு திரும்ப தயாராகிய நிலையில் அவர் பணியாற்றிய வீட்டில் சம்பளம் வழங்காமல் சிறைவைத்து வேலைவாங்கியதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடந்த 2014ம ஆண்டு பல மாதங்களாக தாயுடன் தொடர்புகொள்ள முடியாதிருந்த நிலையில் தீவிர முயற்சியின் பின்னர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தினூடாக தனது தாய் மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கண்டறியப்பட்டது.
அன்று தொடக்கம் 2017ம் நவம்பர் மாதம் வரை தனது தாய் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவரை நாட்டுக்கு அழைத்துவர பிரதேசசபை உறுப்பினர்கள் தொடக்கம் ஜனாதிபதி வரை கடிதங்கள் எழுதி உதவி கேட்டாலும் சாத்தியப்படவில்லை. விடயஞ்சார் அமைச்சருடன் கதைப்பதற்கு பல தடவைகள் சென்றபோதிலும் அவரை சந்திப்பதற்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
தனது தாய் கடந்த நவம்பர் மாதம் 13ம் திகதி இறந்ததாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணிய அதிகாரியொருவர் தொடர்புகொண்டு அறிவித்ததாகவும் தனது தாயின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாக பணியகத்திற்கும் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு கடிதம் மூலம் உதவி கோரியபோதிலும் இன்னும் சாத்தியமாகவில்லை என்றும் கவலை வௌியிட்டுள்ள தனுஷ்க தனது தாயின் சடலத்தையாவது கொண்டு வர உதவுமாறும் கோரியுள்ளார்.