
வற் வரியை 10 வீதத்தால் அதிகரித்த சவுதி அரேபியாசவுதி அரேபியா அந்நாட்டின் வற் வரியை 10 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவையும் நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ஏற்கனவே 5 வீதமாக இருந்த வற் வரியை கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் காரணமாக 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சவுதி சுட்டிக்காட்டியுள்ளது.
“கவலைக்குரிய” ஆனால் “மிகத் தேவையான” நடவடிக்கையாக இதனைப் பார்ப்பதாக தெரிவித்துள்ள சவுதி அரேபியா ஜூன் முதல் வாழ்க்கைக் கொடுப்பனவை நிறுத்துவதுடன் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் வற் வரியை 15 சதவீதமாக இருக்கும் என்று சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், முன்னர் எப்போதும் இல்லாத வகையில் உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி மற்றும் அதன் நிதி மற்றும் பொருளாதார விளைவுகளை மிகக் குறைவான சேதங்களுடன் சமாளிக்கவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அந்நாட்டு நிதியமைச்சர் ச முகமது அல் ஜாதான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னெப்போதும் இல்லாத வகையில் எண்ணெயின் தேவை குறைவடைந்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள சவுதி நிதியமைச்சர், வரவு செலவுத் திட்டத்திற்கான பொது வருவாயின் முக்கிய ஆதாரமான எண்ணெய் வருவாயில் கடுமையான வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. ” பல உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளில் வீழ்ச்சியானது எண்ணெய் அல்லாத வருவாய் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அளவை எதிர்மறையாக பாதித்தது,” என்றும் தெரிவித்துள்ளார்.