விசா அனுமதியின்றி சட்டவிரோதமாக தங்கி தொழில் புரிந்து வரும் தொழிலாளர்களுக்கு சவூதி அரேபியா வழங்கியுள்ள பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் முடிவடைவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது மன்னிப்பு காலம் முடிவடைவதற்கு முன்னர் நாட்டிலிருந்து வெளியேறாத வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் எனவும், மீண்டும் சவூதிக்கு வருவது தடை செய்யப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பொதுமன்னிப்பு காலத்துக்குள் அங்கிருந்து வெளியேறுபவர்களுக்கு மீண்டும் சட்டபூர்வமான முறையில் சவூதிக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பொதுமன்னிப்பு காலத்துக்குள், சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் சவூதியிலிருந்து வெளியேறுவதனூடாக, தேவையற்ற அசௌகரியங்களைத் தவிர்க்க முடியும் என சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
பொது மன்னிப்பு காலத்தில் சவூதியில் இருந்து 3 ஆயிரத்து 500 இலங்கையர்கள் நாடு திரும்பியதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தற்போது வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலம் எந்த காரணத்திற்காகவும் நீடிக்கப்பட மாட்டாது என சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.