யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையில் கல்விகற்று பட்டம்பெற்ற மாணவர்கள் இலங்கை ஆயுள்வேத மருத்துவ சேவையின் ஆரம்ப தரத்திலான மருத்துவ உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென கவலை தெரிவிக்கின்றனர். தமிழ் பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியாத நிலை திட்டமிட்ட புறக்கணிப்பா எனவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சு இலங்கை ஆயுள்வேத மருத்துவ சேவையின் ஆரம்ப தரத்திலான மருத்துவ உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது. பட்டச் சான்றிதழ் 2015 மே முதலாம் திகதி வரை செல்லுபடியாகும் நிலை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையில் பயின்று பட்டம் பெற்றவர்களின் சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் 2015 ஜூலை 30 ஆம் திகதி ஆக உள்ளது. இதனால் சித்தமருத்துவத்துறையில் பட்டம் பெற்று டாக்டர்களாக பணியாற்ற தகுதியுள்ள 46 தமிழ் மாணவர்கள் விண்ணப்பிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதென கவலை தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தமிழ் மாணவர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருப்பதோடு அவர்கள் நிரந்தரமான நியமனம் பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் காத்திருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருப்பதாக தமிழ் சித்த மருத்துவ பட்டதாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர். பாதிப்புக்குள்ளாகிய சித்தமருத்துவ பட்டதாரி ஒருவர் தகவல் தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் சித்த மருத்துவம் மற்றும் யூனாரிசம் மருத்துவத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு கற்றவர்களில் யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பயின்ற சித்த மருத்துவ மாணவர்கள் உள்ளக பயிற்சியை நிறைவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டமையினால் நிரந்தர நியமனம் பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் எங்களுடன் ஒரே கல்வியாண்டிற்குத் தெரிவு செய்யப்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் சேவை மூப்பிலும் ஒரு வருடத்தால் மூத்தவர்களாக இருக்கப்போகின்றனர். இது ஒரு வகையில் இன ரீதியிலான புறக்கணிப்-பாக கொள்ளவேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.
வேலைத்தளம்/ நன்றி- வீரகேசரி