சுதந்திர வர்த்தக வலயங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வாக்களிப்பதற்கான இலகுவாகும் வகையில் அருகாமையில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்குமாறு தேர்தல் வன்முறைகள் தொடர்பில் கண்காணிக்கும் அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.
சுதந்திர வர்த்தக வலயங்களில் பணியாற்றும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் தமது பெறுமதி மிக்க வாக்குகளை வழங்குவதற்கு ஏதுவான வகையில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்குமாறு அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சுதந்திர வர்த்தக வலயங்களில் பணியாற்றும் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் தூர பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள விடுமுறைத் தினங்கள் சென்று வாக்களித்து திரும்புவதற்கு போதுமானதாக இல்லை. போதுமான விடுமுறை வழங்குவதற்கான விடுமுறை மற்றும் பணம் இல்லாமையினால் அருகாமையில் வாக்களிப்பு நிலையங்களை அமைத்துக்கொடுப்பது சிறந்தது என்று அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
தூர பிரதேசங்களில் உள்ளவர்கள் அவர்களின் கிராமங்களுக்கு சென்று ஒரே நாளில் திரும்புவதற்கு விரும்புவதில்லை. எனவே வாக்களிக்கும் தினத்தில் கிராமங்களுக்கு செல்வதை தவிர்த்து விடுவார்கள். நாட்டின் முதலாவது சுதந்திர வர்த்தக வலயமான கட்டுநாயக்க வர்த்த வலயத்தில் சுமார் 40,000இற்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகின்றனர். பியமக வர்த்தக வலயத்தில் 22,000 பேரும் கொக்கல வர்த்தக வலயத்தில் 17000 பேரும் வத்துபிட்டி வர்த்தக வலயத்தில் 8000 பேரும் பணியாற்றுகின்றனர் என சிரமபிமானி கேந்திர திட்ட ஏற்பாட்டாளர் சுகத் ராஜபக்ஷ தேசிய பத்திரிகையொன்றுக்கு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.