அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக வருகைத்தரும் நோயாளர்களுக்கான பரிசோதனை மேற்கொள்ள தேவையான இயந்திரங்களை பெற்றுகொடுத்த பின்னர் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தை புறக்கணிக்கும் வைத்தியர்கள் தொடர்பான அறிக்கையொன்றை உடனடியாக சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டாரவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
நேற்று சுகாதார அமைச்சர் தலைமையில் நேற்று (05) நடைபெற்ற நிறுவன பணிப்பாளர்கள் கூட்டத்தில் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு கூட வசதியுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் 1200 மில்லியன் ரூபா செலவில் ஆய்வுகூட உபகரணங்களை சுகாதார அமைச்சு பெற்றுக்கொடுத்துள்ளது. மாவட்ட பொது மருத்துவமனைகளுக்கு உபகரணங்களை பெற்றுகொடுக்க அனைத்து மாகாணசபைகளுக்கும் தலா 30 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கான அரச மருத்தவமனைகளுக்கு செல்லும் அனைத்து நோயாளர்களினுடைய குருதி பரிசோதனை உட்பட அனைத்து பரிசோதனைகளும் வைத்தியசாலைகளிலேயே மேற்கொள்ள வேண்டும் என்றும் தனியார் ஆய்வுகூடங்களில் நடத்தப்படக்கூடாது என்றும் கடந்த 2016ஆம் ஆண்டு சுற்றுநிரூபம் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த இலங்கை ஆய்வுகூட விஞ்ஞான சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், தற்போது அரச வைத்தியசாலைகளில் ஆய்வுகள் 30 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதனால் தனியார் ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிசோதனைகளும் குறைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த சுற்றுநிரூபத்தை துஷ்பிரயோகம் செய்யும் வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.