ஏப்ரல் 21 தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஜுலை மாதம் முதல் அரசாங்கத்தினால் பல்வேறு பொருளாதார மானியங்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்கமைய, மிகச் சிறிய அளவில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக கடன்திட்ட முறைமை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
வட்டிவீதமின்றி 5 இலட்சம் ரூபா கடன் வழங்கப்படவுள்ளது.
அத்துடன், ஒரு வருட நிவாரண காலத்துடன், 3 ஆண்டுகளுக்குள் மீள செலுத்துவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படவுள்ளது.
அதாவது கடன் பெற்றுக்கொண்டதன் பின்னர், ஓராண்டு பூர்த்தியடைந்தையடுத்து, அதனை மீளச் செலுத்த ஆரம்பிக்கலாம்.
இந்த கடன் முறைமையானது பிரதேச அபிவிருத்தி வங்கி ஊடாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக அருகிலுள்ள பிரதேச அபிவிருத்தி வங்கிகளில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொண்டு, விண்ணப்படிவங்களையும் கையளிக்க முடியும். சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்கள் இந்த கடன் திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம்.
இதேநேரம், தற்போது சுற்றுலாத்துறையில் வர்த்தக நிறுவனங்களின் ஊடாக வணிக வங்கிகளில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கடனுக்கான தவணை மற்றும் அதற்காக செலுத்தவேண்டிய வட்டிவீதம் என்பனவற்றை அறவிடுவது 31 மார்ச் 2020 வரை கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிமூலம்: லங்காதீப