அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளாகினர் என்று கூறி கல்வியமைச்சு மூவாயிரம் பேருக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வியைப் பாதுகாப்பதற்கான வாண்மையாளர்களின் ஒன்றிணைவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
ஏற்கனவே ஜனாதிபதி கடந்த காலத்தில் வழங்கிய அறிவுறுத்தல்களையும் கவனத்தில் கொள்ளாமல் ஏற்கனவே 1028 நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கல்வி நிர்வாக சேவை யாப்பிற்கமைய நியமனங்களை அரச சேவை ஆணைக்குழுவே வழங்கவேண்டும். எனினும் குறித்த ஆணைக்குழு ஜனாதிபதியின் அமைச்சரவை பத்திரத்தையும் மீறி தமது பொறுப்பை கல்வியமைச்சு வழங்கியுள்ளது என்று ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், இலங்கை கல்வி நிர்வாக சேவை சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், இலங்கை தேசிய அதிபர் சங்கம் ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.