ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர தனது மே மாதத்திற்கான முழு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அரச ஊழியர்களின் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதியத்திற்கு ஒப்படைத்துள்ளார்.
தான் தன்னார்வமாக அவ்வாறு செய்வது தேசத்தின் அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி நெருக்கடியற்ற வரவு செலவுத்திட்டமொன்று தேவை என்ற காரணத்தினாலாகும் என செயலாளர் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் மாதாந்த சம்பள பட்டியல் 80 பில்லியன் ரூபாவாகும். அதாவது 8000 கோடி ரூபாவாகும் என பீ.பி ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். அரச கூட்டுத்தாபனங்கள், வங்கி மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்த்துப் பார்க்கும் போது அது சுமார் 90 பில்லியன் முதல் 100 பில்லியன் வரையாகும்.
கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் வறிய மற்றும் இடர் நிலைக்குள்ளாகியுள்ள மக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி வழங்கும் தூரநோக்கு தலைமைத்துவம் ஏனைய நாடுகளைப் பார்க்கிலும் சிறப்பானதாகும். எனவே அவரது முயற்சிக்கு உதவுவதற்காக தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து அரசாங்க ஊழியர்களும் தமது சம்பளத்தில் அரைவாசியையேனும் தமது தங்கிவாழ்வோருக்கு நன்மை பயக்கும் அரச ஊழியர்களின் விதவைகள் மற்றும் அநாதைகள் நிதியத்திற்கு ஒப்படைத்தால் மே மாதம் அரசாங்கத்தின் செலவு 50 பில்லியன் ரூபாவினால் குறைந்து வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகை ஒரு மாதத்தில் 100 பில்லியன் ரூபாவினால் குறைவடையும் என பீ.பி ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.