ஜப்பானில் துறைசார் நிபுணத்துவம் மிக்கவர்களுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கான நிபுணத்துவ பரீட்சை (SSW) நடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அண்மையில் ஜப்பானுக்கு விஜயம் செய்த திறன்அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையிலான குழுவிற்கும் ஜப்பான் அதிகாரிகளுக்கும் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து குறித்த திறன்காண் பரீட்சை இலங்யைில் நடத்தப்படவுள்ளது.
ஜப்பானில் உள்ள கட்டுமானம், விவசாயம், உணவு விநியோகம், ஹோட்டல் உட்பட 14 துறைகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுகொடுப்பது தொடர்பில் இவ்விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டது.
ஜப்பான் அரசினால் நடத்தப்படும் SSW பரீட்சையை இலங்கையில் நடத்துவது மற்றும் துறைசார் தொழில்நுட்ப பயிற்சி, பயிற்சியாளர்களை இணைத்தல் போன்றன தொடர்பில் உரிய நிறுவனங்களிடமும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய குறித்த பயிற்சியை நடத்தும் அந்நாட்டு நீதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் தொழில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
மேலும் ஜப்பானில் பராமரிப்பு சேவையில் அதிக எண்ணிக்கையான இலங்கை இளைஞர் யுவதிகளை ஈடுபடுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மேலும் எதிர்வரும் செப்டெம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் நிபுணத்துவ பரீட்சை நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.