இலங்கையருக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுகொடுக்கும் திட்டத்தின் கீழ் இது வரை வேலைவாய்ப்புக்களை பெற்றுகொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கவில்லை என்றும் அதனால் இடைத்தரகர்கள் மற்றும் போலி நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எச்சரித்துள்ளது.
சுகாதாரம், மீன்பிடி, கட்டுமானம், கைத்தொழில், தகவல் தொழில்நுட்பம், கைத்தொழில் உட்பட 14 துறைகளில் வேலைவாய்ப்புக்களை இலங்கையருக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது. தகவல் தொழில்நுட்பம், மற்றும் விளைாயாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ மற்றும் ஜப்பான் நீதியமைச்சர் தகாஷி யமஷிட்டா ஆகியோர் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இத்தொழில்வாய்ப்புக்கு இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பயிற்சிகளை வழங்கும். மொழித்தேர்ச்சியும் கவனத்திற்கொள்ளப்படும். எனினும் இன்னமும் தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் தொழில்வாய்ப்புகளை பெற்றுத்தருவதாக ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளமையினால் அவதானத்துடன் இருக்குமாறு பணியகம் எச்சரித்துள்ளது.
அத்தோடு, குறித்த விடயத்தை காரணம் காட்டி ஜப்பானில் வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பணியகம் அறிவித்துள்ளது.