தங்குமிட விடுதி பொறுப்பதிகாரி பதவி வெற்றிடங்கள் ‍குறித்து விசனம்

கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள் மற்றும் தேசிய பாடசாலைகளின் தங்கும் விடுதிகளில் பொறுப்பதிகாரி மற்றும் உதவி பொறுப்பதிகாரிகளின் சம்பள முரண்பாட்டை தீர்த்து தற்போதுள்ள வெற்றிடங்களை ஆட்சேர்ப்பு செய்யாவிடின் தங்கும் விடுதிகளை மூடவேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கல்விசாரா ஊழியர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தங்குமிட பொறுப்பதிகாரி மற்றும் உதவி பொறுப்பதிகாரி பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யாவிடின் சுமார் 8000 மாணவ மாணவிகள் தங்குமிட வசதிகளை இழக்க நேரிடும் என்று அச்சங்கம் எச்சரித்துள்ளது.

ஆட்சேர்ப்புக்கான அனுமதியை தேசிய சம்பள.ஊழியர் தொகைமதிப்பீட்டு ஆணைக்குழு மற்றும் நிறுவன பணிப்பாளர் நாயகம் ஆகியோர் வழங்க வேண்டும் என செயலாளர் எ.கே.டப்ளியு விஜேசேக்கர தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு முழுவதும் 20 கல்வியியற் கல்லூரிகள், 4 ஆசிரியர் கலாசாலைகள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ள தேசிய பாடசாலைகளில் பொறுப்பதிகாரிகள் மற்றும் உதவி பொறுப்பதிகாரிகள் உள்ளனர். 406 அதிகாரிகளுக்கான தேவை நிலவுகிறது. அதற்கான அனுமதியினை தேசிய சம்பள மற்றும் ஊழியர் தொகைமதிப்பீட்டு ஆணைக்குழு வழங்கியுள்ளது, எனினும் 170 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

இவ்வூழியர் பற்றாக்குறை காரணமாக தற்போது பணியில் உள்ள பொறுப்பதிகாரிகளும் உதவி பொறுப்பதிகாரிகளும் 24 மணிநேரமும் பணியாற்ற வேண்டியுள்ளது. இது பொதுச்சேவை ஆட்சேர்ப்பு சட்டதிட்டங்களுக்கு முற்றிலும் முரணான செயலாகும்.

கடந்த 2015, 2016ம் ஆண்டு காலப்பகுதியில் க.பொ.த உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்கள் ஒன்றாக கல்வியியற் கல்லூரிகளில் இணைத்துக்கொள்ளப்பட்டமையினால் தங்கும் விடுதிகளில் தங்கியிருப்போரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் பொறுப்பதிகாரிகள் மற்றும் உதவி பொறுப்பதிகாரிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படாமையினால் பணியில் உள்ளவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் ஓய்வின்றி பணியாற்ற வேண்டியேற்பட்டுள்ளது.

தங்குமிட பொறுப்பதிகாரிகள் 24 மணிநேரமும் சேவையில் இருக்க வேண்டும். அவர்களுக்கான வேலைநேரம் 12 மணித்தியாலங்களாகும். 8 மணிநேர வேலை முடிந்த பின்னர் மிகுதி 4 மணி நேரத்திற்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவேண்டும். விசேட கொடுப்பனவோ அல்லது லீவு நாட்களில் பணிபுரிவதற்கான கொடுப்பனவோ இதுவரை தமக்குகொடுக்கப்படவில்லை. ஏற்கனவேயுள்ள பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தாமல் பாடசாலை சுகாதார உதவியாளர் என்ற தேவையற்ற பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்து வருகின்றனர்.

தங்குமிட பொறுப்பதிகாரி மற்றும் உதவி பொறுப்பதிகாரிகள் போட்டிப்பரீட்சையினூடாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். குறைந்த சம்பளத்திற்கு 24 மணிநேரம் பணியாற்ற வேண்டியேற்பட்டுள்ளமையினால் நியமனம் பெற்ற பலர் சேவையை விட்டு விலகி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தங்கும் விடுதிகளை முன்னெடுத்து செல்வதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளை உடனடியாக செயற்படுத்துமாறு தேசிய சம்பள.ஊழியர் தொகைமதிப்பீட்டு ஆணைக்குழு மற்றும் நிறுவன பணிப்பாளர் நாயகத்திடம் நாம் கோரிக்கை விடுக்கிறோம் என்றும் கல்விசார ஊழியர்கள் ஒன்றியத்தின் செயலாளர் எ.கே.டப்ளியு விஜேசேக்கர தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435